Offline
இன்னொரு ’பருத்திவீரன்’; கார்த்தி- அரவிந்த் சாமியின் கலக்கல் கூட்டணியில் ’மெய்யழகன்’
Published on 05/27/2024 03:18
Entertainment

நடிகர் கார்த்தி- அரவிந்த்சுவாமி கூட்டணியில் உருவாகி வரும் படத்திற்கு ‘மெய்யழகன்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

’96’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில், நடிகர் கார்த்தி- அரவிந்த்சாமி கூட்டணியில் உருவாகி வரும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. நடிகர்கள் சூர்யா- ஜோதிகாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறது. படத்தின் தலைப்பு இதற்கு முன்பு கசிந்த தகவல்களின்படி ‘மெய்யழகன்’ என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இன்று வெளியாகியுள்ள முதல் பார்வை போஸ்டரில் தஞ்சாவூர் பெரியகோயில் பின்னணியில் நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த்சுவாமி இருவரும் சைக்கிளில் ஜாலியாக செல்லும்படி இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் ’‘பருத்திவீரன்’ படத்தில் கார்த்தி- சரவணன் கதாபாத்திரம் மாப்பிளை-சித்தப்புவாக எப்படி ஹிட் ஆனதோ அப்படி இந்தப் படத்தில் அரவிந்த்சாமி- கார்த்தி காம்பினேஷன் இருக்கிறது. இன்னொரு ‘பருத்திவீரன்’’ என்று சொல்லி வருகின்றனர்.

இன்னும் சிலர், ‘சார்பட்டா’ படத்தில் ஆர்யா- பசுபதி இருவரும் சைக்கிளில் அமர்ந்து செல்லும் காட்சியை நியாபகப்படுத்துவதாகவும் கமெண்ட் செய்திருக்கின்றனர். அதேபோல, கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இந்தப் படத்தில் நடிகர்கள் ராஜ்கிரண், ஸ்ரீவித்யா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர்.

இந்தப் படத்தில் நடிகர் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. நடிகர் கார்த்தியின் பிறந்தநாள் நாளைக் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், படத்தில் இருந்து ஸ்பெஷல் அறிவிப்பாக இதனை படக்குழு வெளியிட்டுள்ளது.

Comments