Offline
பத்துமலை கோயிலில் குர்ஆன் ஓதிய சுற்றுலாப்பயணி; மன்னிப்பு கோரினார்
News
Published on 05/30/2024

பத்துமலை முருகன் கோயிலில் தாம் குர்ஆன் ஓதுவதைக் காணொளி எடுத்து அதைத் தமது @abdeentube டிக்டாக் தளத்தில் பதிவேற்றம் செய்த சுற்றுப்பயணிக்கு எதிராக எழுந்த அதிருப்திக் குரல்களுக்கு மதிப்பளித்து, அந்தச் சுற்றுப்பயணி தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

“இதுதொடர்பாக எழுந்த அதிருப்திக் குரல்கள் என்னை வியக்க வைக்கிறது. பத்துமலைக் கோயில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் எனக் கருதினேன். எனவே, எனது சொந்த டிக்டாக் தளத்திற்காக அங்கு குர்ஆன் ஓத முடியும் என நினைத்தேன். ஆனால் அவ்விடத்தில் அது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்பது இப்போது எனக்குத் தெரியவந்துள்ளது. எனது காணொளி மற்றவர்களை, குறிப்பாக இந்து சமயத்தினரின் மனதைப் புண்படுத்தும் என எதிர்பார்க்கவில்லை.

“குர்ஆன் ஓதி மற்றவர்களின் மனதைப் புண்படுத்துவது எனது நோக்கமல்ல. இதை நான் எல்லா இடங்களிலும் செய்வது வழக்கம். நான் அன்பைப் பரப்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

பத்துமலைக் கோயிலில் அந்தச் சுற்றுப்பயணி குர்ஆன் ஓதியது முறையல்ல என்று, பிரதமர் துறை அமைச்சர் முகமட் நயிம் மொக்தார் தெரிவித்ததாக இணையச்செய்தி ஒன்று தெரிவித்தது.

மேலும் இத்தகைய செயல்கள் மலேசியாவில் உள்ள மக்களைப் பிளவுப்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார். அதோடு பிற சமயங்களை இழிவுபடுத்துவதை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை என்றார் அவர்.

Comments