சண்டிகர்: பாஜக எம்பியும், பாலிவுட் நடிகையுமான கங்கனா ரனாவத் கன்னத்தில் சிஐஎஸ்எஃப் பெண் காவலர் அறைந்திருந்தது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் சிஐஎஸ்எஃப் பெண் காவலர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று மதியம் சுமார் 3.30 மணியளவில் டெல்லி செல்வதற்காக சண்டிகர் விமான நிலையத்திற்கு கங்கனா ரனாவத் வந்திருக்கிறார். அப்போது அவரிடம் வழக்கமான சோதனைகள் நடைபெற்றிருக்கின்றன. அந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில், பணியிலிருந்த சிஐஎஸ்எஃப் பாதுகாப்புப்படை பெண் காவலர் குல்விந்தர் கவுர், கங்கனாவின் கன்னத்தில் அறை விட்டிருக்கிறார்.
இந்த சம்பவத்தில் நிலை குலைந்த கங்கனாவை, அவருடைய பாதுகாவலர்கள் அங்கிருந்து பத்திரமாக அப்புறப்படுத்தினர். மற்ற பாதுகாப்புப் படை வீரர்கள், கவுரை அப்புறப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் ஷேர் ஆகி பெரும் விவாதங்களை கிளப்பியது.
இந்த சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்ட கங்கனா, “நான் நன்றாக இருக்கிறேன். விமான நிலையத்தில் நடைபெற்ற பாதுகாப்பு சோதனையின்போது அந்தச் சம்பவம் நடைபெற்றது. சோதனை முடிந்த பின், நான் செல்லும்போது அந்த பெண் காவலர் வேறு ஒரு கேபினில் அமர்ந்திருந்தார். நான் அவரைக் கடக்கும்போது அவர் என் முகத்தில் அடித்தார், பின்பு என்னை திட்டினார்.
ஏன் இப்படி செய்தாய் என்று நான் அவரிடம் கேட்டேன், அதற்கு அவர், விவசாயிகளின் போராட்டத்துக்காகதான் இப்படி செய்தேன் என்றார். பஞ்சாபில் பயங்கரவாதம் அதிகரித்து வருவதும், இதை எப்படி கையாள்வது என்பதும் தான் எனக்கு கவலை அளிக்கிறது” என்று கூறியிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள மூத்த சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் உள்ளடக்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தற்போது அவர் மீது ஐபிசி பிரிவு 323 மற்றும் 341 என இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் அவர் கைது செய்யப்படவில்லை.