பிறந்தது முதல் கண்கள் மூடாமல் நம்மைப் பாதுகாத்து வளர்க்கும் தெய்வம் தாய் என்றால், நமக்கு வழிகாட்டியாக இருந்து நமக்கான தேவைகளைக் கண்டறிந்து அதை நிறைவேற்ற வாழ்நாளெல்லாம் அயராது பாடுபடும் இன்னொரு தெய்வம் நமது தந்தை என்று ம.இ.கா. தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தமது தந்தையர் தின வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
தந்தையருக்கான இச் சிறப்பு தினத்தில் தந்தையர் அனைவருக்கும் முதலில் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களின் வாழ்நாளெல்லாம் குடும்பத்திற்காகவும், பிள்ளைகளின் நலன்களுக்காகவும் கடுமையாக உழைத்த – உழைத்துக் கொண்டிருக்கும் – தந்தையர்களுக்கு எனது பாராட்டுதல்களையும் உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
நம் மீது தந்தையர்கள் அளவிட முடியாத அன்பு செலுத்தினாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், கண்டிப்புடன் நம்மை அவர்கள் வளர்ப்பதற்குக் காரணங்களும் உண்டு.
தங்களின் பிள்ளைகள் வழிதவறிப் போய்விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையும் தன்னை விட தனது பிள்ளைகள் வாழ்வில் பன்மடங்கு முன்னேறி சீரும் சிறப்புமாக வாழ வேண்டும் என்ற நல்லெண்ணமும் தான் தந்தையர் நம் மீது கண்டிப்பைக் காட்டுவதற்கான காரணங்களாகும்.
இதை இன்றைய இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்றைக்கு ஒரு சிலர் தங்களின் தந்தையரை இழந்து அவர்களின் இழப்பை இப்போது புரிந்து கொண்டிருக்கலாம். வேறு சிலருக்கு தங்களின் தந்தையோடு இந்தத் தந்தையர் தினத்தைக் கொண்டாடும் அரிய வாய்ப்பு கிடைத்திருக்கலாம்.
ஏதோ காரணங்களால் தந்தையரை இழந்திருப்பவர்கள் அவர்களின் பங்களிப்பை இந்த நன்னாளில் நினைவு கூர்ந்து போற்ற வேண்டும்.