ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனை எதிர்த்து அங்கு பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயல்படுகின்றன. மேலும் அவர்கள் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துதல், பொதுச்சொத்துகளை சேதப்படுத்துதல் என அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். எனவே கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த அரசாங்கம் போராடி வருகிறது. அதன் ஒருபகுதியாக ராணுவத்தினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.
இந்தநிலையில் நைஜர் நாட்டின் எல்லையருகே அமைந்துள்ள மன்சிலா பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். அப்போது ஏராளமான வீடுகள், ராணுவ முகாம்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பின்னர் ராணுவ வீரர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய ஜமாஸ் நுஸ்ரத் உல்-இஸ்லாம் வா அல்-முஸ்லிமின் என்ற கிளர்ச்சிக் குழு பொறுப்பேற்று உள்ளது. தாக்குதல் தொடர்பாக அரசு தரப்பில் இதுவரை அறிக்கை வெளியிடப்படவில்லை. எனினும், கிளர்ச்சிக் குழுவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. இதன் காரணமாக அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.