Offline
நடுவானில் 67 பேருடன் தீப்பற்றி எரிந்த ஆஸ்திரேலியா விமானம்
News
Published on 06/19/2024

பறவைகள் மோதியதால் ஆஸ்திரேலியா விமானம் நடுவானில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்தின் குயின்ஸ் டவுன் நகரில் இருந்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு வெர்ஜீன் ஆஸ்திரேலியா விமான நிறுவனத்தின் விமானம் (போயிங் 737-80) நேற்று இரவு புறப்பட்டது. இந்த விமானத்தில் 67 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் பயணம் செய்தனர். இந்த நிலையில் விமானம் புறப்பட்டு 50 நிமிடங்களில் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது, விமான எஞ்சினில் திடீரென தீப்பற்றியது.

இதனால், விமானத்தில் ஒரு எஞ்சின் முழுவதும் செயல் இழந்தது. இதையடுத்து, விமானம் அவசர அவசரமாக நியூசிலாந்தின் இன்வர்கார்கில் நகரத்தில் தரையிறங்கியது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர் என்று விமான நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலம் மெல்போர்ன் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது அதன் எஞ்சின் மீது பறவைகள் மோதியதாலே தீப்பற்றியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Comments