Offline
போர்ட்டிக்சனிலுள்ள விடுதி ஒன்றில் ஆடவர் ஒருவர் பெண்ணை தாக்கிய காணொளி வைரல்; போலீஸ் விசாரணை ஆரம்பம்
Published on 06/20/2024 23:54
News

பெட்டாலிங் ஜெயா:

நெகிரி செம்பிலான், போர்ட்டிக்சனில் உள்ள ஒரு ஹோட்டலில் ஆண் ஒருவர் அவரது மனைவி என நம்பப்படும் பெண் ஒருவரை உடல்ரீதியாக தாக்கும் ஒரு காணொளி வைரலானது தொடர்பில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று பேஸ்புக்கில் வெளிவந்த 31 வினாடிகள் கொண்ட காணொளியில், ஒரு திருமணமான தம்பதியினருக்கு இடையே தகராறு நடந்தது போல தோன்றுவதாக போர்ட்டிக்சன் மாவட்ட காவல்துறைத் தலைவர் அய்டி ஷாம் முஹமட் கூறினார்.

“பாதிக்கப்பட்டவர் ஏற்கனவே இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்துள்ளார் என்றும், இது தொடர்பான விசாரணைக்காக குடும்ப வன்முறைச் சட்டத்தின் பிரிவு 323/18A இன் கீழ் போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்,” என்று அவர் சொன்னார்.

வைரலாகி வரும் பேஸ்புக் வீடியோவில், கணவர் தனது மனைவிக்கு துரோகம் செய்ததாகவும், வேறொரு பெண்ணுடன் இருக்க ஹோட்டலுக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கன்னத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், உடலின் மற்ற பாகங்களில் வலி ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், பொதுமக்களின் ஊகங்கள் விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் என்பதால், இந்த சம்பவத்தை மேலும் பரப்ப வேண்டாம் என்றும் எய்டி பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

Comments