Offline
பள்ளி வேன் மீது மோதியதில் 5 வயது சிறுமி பலி
News
Published on 06/20/2024

பாசீர் கூடாங்:

நேற்றுக்காலை 11.35 மணியளவில் ஜாலான் சூரியா, பண்டார் ஸ்ரீ ஆலம் என்ற இடத்தில், தனது வீட்டின் முன் பள்ளி வேன் மோதியதில் ஐந்து வயது சிறுமி உயிரிழந்தார்.

50 வயதுடைய வேன் ஓட்டுநர், பாதிக்கப்பட்ட சிறுமியையும் அவரது ஆறு வயது சகோதரனையும் அவர்களது வீட்டின் முன் இறக்கிவிட்டபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக ஸ்ரீ ஆலம் மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமட் சோஹைமி இஷாக் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரின் சகோதரர் வாகனத்தின் பின்னால் பாதுகாப்பாக செல்வதைக் கண்ட ஓட்டுநர், சிறுமி தனது சகோதரனைப் பின்தொடர்வதாக நம்பி ஓட்டத் தொடங்கினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, வேனுக்கு முன்னால் சென்ற சிறுமியை கவனிக்கத்தவறிய ஓட்டுநர் எதிர்பாராதவிதமாக மோதியதாக நம்பப்படுகிறது.

இந்த சம்பவத்தின் விளைவாக, பாதிக்கப்பட்டவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது,” என்று அவர் கூறினார்.

உடனடியாக வேனில் இருந்து வெளியேறிய ஓட்டுநர், சிறுமியை சோதனை செய்ததுடன், அவரது தாயாரிடம் சம்பவத்தை தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அவரை மாசாய் சுகாதார மருத்துவமனைக்கு கொண்டு சென்றார், ஆனால் சிறுமி இறந்துவிட்டதாக அங்கிருந்த சுகாதார அதிகாரி உறுதிப்படுத்தினார்.

சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 பிரிவு 41(1)ன் கீழ் கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் வாகனம் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணைக்கு உதவியாக குறித்த வேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகளை எப்போதும் கடைபிடிக்குமாறும், எச்சரிக்கையுடனும் பொறுப்புடனும் வாகனங்களை ஓட்டுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறோம் என்றார் அவர்.

Comments