பல நிரந்தர வைப்பு நிதி கணக்குகளில் இருந்து 24.2 மில்லியன் ரிங்கிட் மோசடி செய்ததை விசாரிக்க உதவுவதற்காக நான்கு வங்கி ஊழியர்கள் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது ரம்லி யூசுப் கூறுகையில், சந்தேகநபர்கள் 22 முதல் 54 வயதுடைய எட்டு ஆண்களும் ஐந்து பெண்களும் அடங்குவர். பன்னிரண்டு நபர்கள் சபாவிலும் ஒருவர் பெர்லிஸிலும் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்களில் நான்கு பேர் வங்கி ஊழியர்கள் என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
சந்தேகநபர்கள் வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவரின் விளக்கமறியல் உத்தரவு நாளையுடன் முடிவடைகிறது. மற்றுமொருவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். குற்றவியல் சட்டம் பிரிவு 420இன் கீழ் இந்த வழக்கு விசாரணை தொடரும் என்றார்.
ஜூன் 13 அன்று, சபாவின் கோத்த கினபாலுவில் பெண் வங்கி ஊழியர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு தொடர்பாக, கும்பலின் மூளையாகச் சந்தேகிக்கப்படும் 40 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டதாக ஜூன் 16 அன்று தெரிவிக்கப்பட்டது. வங்கிக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள சிண்டிகேட் உறுப்பினர்களின் ஈடுபாடு விசாரணையில் தெரியவந்துள்ளது, அவர்கள் அங்கீகரிக்கப்படாத பணம் எடுப்பதற்கு சதி செய்ததாக ரம்லி கூறினார்.
சிலாங்கூரில் உள்ள பெட்டாலிங் ஜெயாவில் ஜூன் மாத தொடக்கத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் வங்கி ஊழியர்களிடம் இருந்து நான்கு புகார்களை போலீசார் பெற்றதாக அவர் குறிப்பிட்டார். மேலும் பலர் இதில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.