கோலாலம்பூர்:
மலேசியாவும் சீனாவும் தங்களுக்கு இடையிலான 50ஆம் ஆண்டு அரசதந்திர உறவை முன்னிட்டு பல்வேறு உடன்பாடுகளில் கையெழுத்து இட்டுள்ளன.
ஐந்தாண்டு பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாட்டை புதுப்பிக்கவும் டுரியான் பழங்களின் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கவும் அவ்விரு நாடுகளும் ஒப்புக்கொண்டு உள்ளன.
சீனப் பிரதமர் லி சியாங்கின் மலேசிய வருகையின்போது புதிய உடன்பாடுகள் ஏற்படுத்தப்பட்டன.
முன்னதாக செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர் வந்திறங்கிய லி,
பிரதமர் அன்வார் இப்ராகிம்மை நிர்வாகத் தலைநகரான புத்ராஜெயாவில் புதன்கிழமை சந்தித்தார்.
அதன் பிறகு வெளியிட்ட அறிக்கையில், “மலேசியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.
வளர்ச்சிக்கான உத்திகள், இருதரப்புக்கும் பலனளிக்கும் ஒத்துழைப்பு, சீன-மலேசிய சமூகத்தை உருவாக்கும் முயற்சிகளை வளர்ப்பதற்கான பரிமாற்றங்கள் ஆகிய அம்சங்கள் மீது சீனா கவனம் செலுத்தும் என்றும் லி தமது அறிக்கையில் குறிப்பிட்டார்.
பசுமை மேம்பாட்டுக்கான மின்னிலக்கப் பொருளியல், வீடமைப்பு, சுற்றுலா, தொடர்புகள் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு டஜன் உடன்பாடுகளில் சீனாவும் மலேசியாவும் கையெழுத்திடும் நிகழ்வை லியும் அன்வாரும் பார்வையிட்டனர்.
2028ஆம் ஆண்டு வரை நடப்பில் இருக்கக்கூடிய புதிய ஐந்தாண்டு திட்டம், வர்த்தம் மற்றும் முதலீடு, வேளாண்மை, உற்பத்தி, கட்டமைப்பு, நிதிச் சேவைகள் போன்ற அம்சங்களுக்கான உத்திபூர்வ ஒத்துழைப்பை வழங்கும்.
இரு நாட்டுப் பிரதமர்களின் சந்திப்பு நிகழ்ந்த பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கை இதனைத் தெரிவித்தது.
ஐந்தாண்டுத் திட்டம் 2013ஆம் ஆண்டு முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது அது புதுப்பிக்கப்படுகிறது.
மலேசியாவில் இருந்து டுரியான் பழங்களுக்கான இறக்குமதிக்கு அனுமதி வழங்க சீனா ஒப்புக்கொண்டு உள்ளதாகவும் அறிக்கை குறிப்பிட்டது.
விசா இல்லாத பயண ஏற்பாடுகள் பற்றி மறுஆய்வு செய்யவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டு உள்ளன.
2009ஆம் ஆண்டு முதல், மலேசியாவின் ஆகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக சீனா விளங்கி வருகிறது.
2023ஆம் ஆண்டு இருநாடுகளுக்கும் இடையில் நடைபெற்ற வர்த்தகங்களின் மொத்த மதிப்பு US$98.9 பில்லியன் என்று மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்து உள்ளது