Offline
ஆட்கடத்தல் கும்பலிடமிருந்து குழந்தைகள் உட்பட 73 பேர் மீட்பு
News
Published on 06/22/2024

கோலாலம்பூர்:

ஜூன் 12 அன்று Ops Mega Pintas என்ற சிறப்பு நடவடிக்கையில் நாடு தழுவிய அளவில் மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான நடவடிக்கையில், மனித கடத்தல் கும்பலிடமிருந்து மீட்கப்பட்ட 73 பேரில் 22 குழந்தைகள் மற்றும் 3 மாற்றுத்திறனாளிகள் அடங்குவர்.

புக்கிட் அமான் சிஐடியின் ஆள்கடத்தல் தடுப்பு மற்றும் புலம்பெயர்ந்தோரின் கடத்தல் தடுப்பு பிரிவு (D3) ஆகியவற்றுடன் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில், 113 மனித கடத்தல்காரர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களும் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் சிஐடி துணை இயக்குநர் ஃபாடில் மார்சஸ் தெரிவித்தார்.

மீட்கப்பட்டோரில் 25 பேர் ஆண்கள், 26 பேர் பெண்கள், 22 பேர் குழந்தைகள் என்று அவர் கூறினார்.

“பாதிக்கப்பட்டோரில் மலேசியர்கள் மட்டுமன்றி பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, பங்ளாதேஷ், கம்போடியா, மியன்மார், தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தோரும் அடங்குவர்,” என்று அரச மலேசியக் காவற்படைத் தலைமையகத்தில் ஜூன் 20ஆம் தேதி செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

மீட்கப்பட்டோரில் உடற்குறையுள்ள மலேசிய மாது ஒருவர் பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் பங்ளாதேஷ் நாட்டவர்களான உடற்குறையுள்ள ஆடவர் இருவர் பிச்சை எடுக்கக் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் திரு ஃபடில் மார்சஸ் சொன்னார்.

இல்லப் பணியாளர்கள், ஹோட்டல் ஊழியர்கள், உணவகம், முடிதிருத்தும் கடை போன்றவற்றிலும் பொற்கொல்லர்களிடம் வேலைசெய்தோர் எனப் பலர் மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அமலாக்க நடவடிக்கையின்போது, ஆட்கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 113 பேரைத் தடுத்து வைத்துள்ளதாகத் ஃபாடில் தெரிவித்தார். அவர்களில் மலேசியர்களும் பங்ளாதேஷ், இந்தோனீசியா, சீனா, தாய்லாந்து நாட்டவர்களும் அடங்குவர் என்றார் அவர்.

 

 

 

Comments