பெங்களூரு: ரேணுகாசாமி என்ற ரசிகரின் கொலை வழக்குத் தொடர்பில் கைதான கன்னட நடிகர் தர்ஷன், குற்றத்தை மறைக்கவும் சாட்சியங்களை அழிக்கவும் ரூ.70 லட்சம் ரூபாயைச் செலவு செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலைச் சம்பவத்தின் தடயங்களை அழிக்கவும் சட்டப் பிரச்சினைகளைத் தீர்க்கவும் நண்பரிடம் ரூ.40 லட்சத்தைக் கடனாக வாங்கி குற்றவாளிகளுக்குக் கொடுத்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மூத்த காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், தர்ஷனுக்கு பணம் கொடுத்த நண்பர் யார் என்பது குறித்து நடிகர் தர்ஷனிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், அவர் யார் என்ற விவரத்தைக் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன், ரசிகர் ரேணுகாசாமி கொலை வழக்கின் தொடர்பில் காவல்நிலையத்தில் சரணடைந்தவர்களுக்கு ரூ.30 லட்சத்தை தர்ஷன் கொடுத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில், சக நடிகை பவித்ரா குறித்து மோசமான கருத்துகளைப் பதிவிட்டு வந்ததால், ரசிகர் ரேணுகாசாமியைக் கடத்திக் கொலை செய்வதற்கு கன்னட நடிகா் தா்ஷனும் நடிகை பவித்ராவும் திட்டமிட்டு, கொடூரமான முறையில் கொலைச் சம்பவத்தை அரங்கேற்றியதாகக் கூறப்படுகிறது. கடந்த 8ஆம் தேதி ரசிகர் ரேணுகாசாமி பெங்களூருவில் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில் கன்னட நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா உள்ளிட்ட 13 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
நடிகா் தா்ஷன், 46, ஏற்கெனவே விஜயலட்சுமி என்பவரைத் திருமணம் செய்துள்ளாா். இந்நிலையில், அவர் நடிகை பவித்ரா கௌடாவுடன் 35, நெருக்கமாகப் பழகி வந்துள்ளார். இதையறிந்த நடிகா் தா்ஷனின் ரசிகா் ரேணுகாசாமி, பவித்ரா கௌடா குறித்து மோசமான கருத்துகளைப் பதிவிட்டு வந்துள்ளார். இதனால் பவித்ரா, ரேணுகாசாமியைக் கொலை செய்யும்படி தர்ஷனை தூண்டியுள்ளதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தர்ஷனின் வீட்டிலிருந்து ஜூன் 19ஆம் தேதி ரூ.37.4 லட்சத்தை கைப்பற்றியதாக மூத்த காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், ரூ.3 லட்சம் தர்ஷனின் மனைவி விஜயலட்சுமியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது. ரசிகர் ரேணுகாசாமி கொல்லப்பட்ட பின்னர், பணத்தை தர்ஷன் தனது மனைவியிடம் வழங்கியதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.