Offline
சமூக ஊடகங்களை பயன்படுத்தி மற்றவர்களை இழிவுபடுத்தாதீர்- மாமன்னர்
News
Published on 07/09/2024

கோலாலம்பூர்:

சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்தி வாக்குவாதத்தில் ஈடுபடவும், மற்றவர்களை இழிவுபடுத்தவும் வேண்டாம் என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம் நாட்டு மக்களுக்கு நினைவூட்டியுள்ளார்.

இந்தச் செயல்கள் பிளவையும் பூசல்களையும் ஏற்படுத்தக்கூடும் என்று கூறிய பேரரசர், இது தீவிரவாதத்திற்கு இட்டுச்செல்லும் குறிப்பாக, இனம், சமயம் சார்ந்த விவகாரங்களை அவர் சுட்டினார்.

இதனை புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு நிலையத்தில் நடைபெற்ற ‘மஅல் ஹிஜ்ரா’ கொண்டாட்ட நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்றபோது அவர் சொன்னார்.

சமூக ஊடகம் மூலம், கட்டுப்படுத்தமுடியாத அளவில் தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்படும் நிலையில், இன்று பொதுமக்கள் எதிர்நோக்கக்கூடிய சவால்கள் அதில் இருப்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

சமூக ஊடகத்தில் சமயம் சார்ந்த தகவல்களை நாடும்போது மலேசியர்கள் கவனமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

அவர்கள் பெறும் தகவல்கள் உண்மையானவையா, அதிகாரம் உள்ள மூலங்களிலிருந்து வருபவையா என்பதை அவர்கள் உறுதிசெய்ய வேண்டும் என்றார் சுல்தான் இப்ராகிம்.

இஸ்லாம் தொடர்பாக திசை திருப்பக்கூடிய, தவறான தகவல்கள் வெளியிடப்படுவது குறித்து கவலை அதிகரித்து வருவதாக அவர் சொன்னார்.

Comments