தென்கொரியாவில் உள்ள சாம்சுங் இலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான தொழிற்சங்கம் இன்று ஜூலை 8ஆம் தேதி முதல் மூன்று நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியது.
அந்த நிறுவனத்துக்கு எதிராக கூடிய விரைவில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படக்கூடும் என்றும் அது எச்சரிக்கை விடுத்தது.
தென்கொரியாவின் தேசிய சாம்சுங் இலெக்ட்ரானிக்ஸ் தொழிற்சங்கத்தில் ஏறத்தாழ 28,000 உறுப்பினர்கள் உள்ளனர். இது தென்கொரியாவில் உள்ள சாம்சுங் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில் ஐந்தில் ஒரு பங்காகும்.
ஊழியர் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் போனஸ் முறை மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் வருடாந்திர விடுப்பில் கூடுதலாக ஒரு நாள் சேர்க்கப்பட வேண்டும் என்றும் குரல் எழுப்பி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை குறித்து தகவல் வெளியிடப்படவில்லை. ஆனால் ஏறத்தாழ 8,100 ஊழியர்கள் அதில் ஈடுபடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்கொரிய தலைநகர் சோலுக்குத் தென்பகுதியில் உள்ள ஹுவாசியோங்கில் இருக்கும் சாம்சுங் தலைமையகத்திற்கு அருகில் ஜூலை 8ஆம் தேதியன்று பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்தது.