Offline
செயற்கை நுண்ணறிவு மூலம் போலிக் காணொளிகள்: தற்காலிகத் தடை குறித்து ஆராயப்படுகிறது
News
Published on 07/10/2024

சிங்கப்பூர்:

மின்னிலக்கம் மூலம் தயாராகும் போலிக் காணொளிகளைக் கண்காணிப்பதுடன் அவற்றுக்கு தற்காலிகமாகத் தடை விதிப்பது ஆகியவை பற்றி சிங்கப்பூர் ஆராய்ந்து வருகிறது.

சிங்கப்பூரில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டினால், உண்மைக்கும் பொய்க்கும் இடையேயான வரைகோடு தெளிவின்றி இருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.

உலக நாடுகள் போலிக் காணொளிகளை எதிர்கொள்ளும் முறைகளை ஆராய்ந்து வருகின்றன என்று சைனாடவுனில் உள்ள ‘பார்க்ராயல் கலெக்‌ஷன் பிக்கரிங்’ என்ற இடத்தில் நடைபெற்ற மாநாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 9ஆம் தேதி) தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்தார்.

மாநாட்டு மேடையில் ராய்ட்டர்ஸ் கிழக்கு ஆசியா, பசிபிக் செய்தி ஆசிரியர் சோயங் கிம்முடன் நடைபெற்ற நேர்காணலில் பேசிய திருவாட்டி டியோ, தென்கொரியாவில் ஏப்ரல் மாதம் நடந்த பொதுத் தேர்தல் சமயத்தில் அந்நாட்டு அரசாங்கம் போலிக் காணொளிகளுக்கு 90 நாள் தடை விதித்ததைச் சுட்டினார்.

அங்கு திருத்தி அமைக்கப்பட்ட சட்டங்கள் ஜனவரி 29ஆம் தேதி அமலுக்கு வந்தன. அவற்றை மீறினால் ஒருவருக்கு ஏழு ஆண்டு வரையிலான சிறைத்தண்டனை அல்லது 50 மில்லியன் வோன் (S$49,0000) வரையிலான அபராதம் விதிக்கப்படலாம்.

எனினும், சிங்கப்பூரின் தேர்தல் காலம் மிகக் குறுகியது என்பதை டியோ நினைவூட்டினார்.

“சிங்கப்பூரில் தேர்தல் நடக்கும் நாள் 90 நாள்களுக்கு முன் தெரிய வாய்ப்பில்லை. அதனால், தென்கொரிய சட்டம் நம் நாட்டுக்குப் பொருந்தாது. எனவே, நமக்கு ஏற்புடைய ஒன்றை நாம் கண்டுபிடிக்க வேண்டும்,” என்று தமது உரையில் கூறினார்.

தற்போதைய நிலையில் சிங்கப்பூர் தேர்தலுக்கு தேதி குறிப்பிடப்படவில்லை. அது 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குள் நடைபெற வேண்டும் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.

Comments