Offline
தேசிய சேவை 3.0 அறிமுகத் திட்டம் ; அடுத்த ஆண்டு ஆரம்பம்
News
Published on 07/11/2024

கோலாலம்பூர்:

நாட்டின் தேசிய சேவை 3.0 அறிமுகத் திட்டம் அடுத்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தொடங்கும் என்று தற்காப்பு அமைச்சர் காலிட் நூர்டின் தெரிவித்துள்ளார்.

இந்த அறிமுகத் திட்டம் நாடெங்கும் உள்ள 13 ராணுவ முகாம்களில் இரு முகாம்களில் நடத்தப்படும் என்றார் அவர்.

“இந்த அறிமுகத் திட்டத்தில் 1,000 பேரை ஈடுபடுத்த வேண்டும் என்பதே இலக்கு. பாலின அடிப்படையில் முகாம்கள் பிரிக்கப்படும்,” என்று ஜூலை 10ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் அமைச்சர் காலிட் விளக்கம் அளித்தார்.

பயிற்சித் தொகுப்பு நகல்களை தற்காப்பு, உயர்க் கல்வி, கல்வி அமைச்சுகள் உறுதி செய்துவிட்டதாக அவர் கூறினார்.

தேசிய சேவைத் திட்டம் முதலில் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் என்றார் அவர்.

உயர்நிலை நான்காம் ஆண்டு மாணவர்கள் பாடத்திட்ட நேரங்களில் இத்திட்டத்தில் ஈடுபடுவர் என்று காலிட் கூறினார்.

அதையடுத்து, அடிப்படை தேசிய சேவைப் பயிற்சி தொடங்கும்.

இதில் குறிப்பட்ட சில 17 வயது மாணவர்களுக்கு மலேசியாவெங்கும் உள்ள 13 ராணுவ முகாம்கள், 20 அரசுப் பல்கலைக்கழகங்கள், பல தொழிற்கல்லூரிகள் ஆகிய இடங்களில் பயிற்சி அளிக்கப்படும்.

தேசிய சேவைப் பயிற்சியில் 70 விழுக்காடு அடிப்படை ராணுவப் பயிற்சியும் 30 விழுக்காடு நாட்டுப் பற்று, ஒற்றுமை தொடர்பான தொகுப்பும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ராணுவ முகாம்களில் அடிப்படை தேசிய சேவைப் பயிற்சி தொடங்கும்.

2026/2027 கல்வி ஆண்டு துவங்கும்போது அரசுப் பல்கலைக்கழகத்தில் தேசிய சேவைப் பயிற்சி தொடங்கும்.

Comments