கோலாலம்பூர்:
சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்துவதின் விளைவாக எழும் பிரச்சனைகளைக் கையாள்வதில் உறுதியாக செயல்படுமாறு தொடர்புத் துறை அமைச்சுக்கும் MCMC எனப்படும் மலேசியத் தொடர்பு பல்லூடக ஆணையத்திற்கும் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் உத்தரவிட்டதாக தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
சுல்தான் இப்ராஹிம் நேற்று காலை இஸ்தானா நெகாராவில் அவர்களை சந்தித்த மாட்சிமை தங்கிய பேரரசர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
அண்மையில், இணையப் பகடிவதையால் ஈஷா எனும் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்தும் சுல்தான் இப்ராஹிமிடம் தெரிவித்ததாகவும் ஃபாஹ்மி கூறினார்.
மேலும் மாமன்னர் சமூக ஊடகங்கள் தொடர்பாக எழும் ‘பிரச்சினைகள்’ குறித்துக் கவலை தெரிவித்தார்.
சமூக ஊடகங்களை பகடி வதை செய்வதற்கும் பகிரங்கமாக அவமானப்படுத்துவதற்கும் ஒரு தளமாகப் பயன்படுத்தக்கூடாது.அது மிக மோசமான விபரீதங்களை விளைவிக்கும் என்று அவர் நினைவுறுத்தினார்.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பான தளமாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அமைச்சு மற்ற நிறுவனங்களுடன் இணைந்து பலப்படுத்தும் என்று ஃபாஹ்மி கூறினார்.