யூரோ கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸை வீழ்த்தி ஸ்பெயின் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஜெர்மனியில் நடைபெற்றுவரும் யூரோ கோப்பை கால்பந்து தொடர், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில், முனிச் நகரில் நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில், ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின.
இதன் 9-ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கோலோ முவானி கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலையை ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனால், 21-ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் யமாய் கோல் அடித்து அதனை சமன்செய்தார்.
தொடர்ந்து, 25-ஆவது நிமிடத்தில் மற்றொரு ஸ்பெயின் வீரர் ஓல்மோ கோல் அடித்து, அணிக்கு வலுவான தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். அதன்பின்னர், இரு தரப்பினரும் கடுமையாக போராடியதால், எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை.
இதன்மூலம், 2-க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் நெதர்லாந்து, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணியை வரும் 14-ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில், ஸ்பெயின் அணி எதிர்கொள்ள உள்ளது.
ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே நடைபெறும் மிக முக்கியமான கால்பந்தாட்ட தொடராக யூரோ கோப்பை உள்ளது. இந்த போட்டிக்கான பரிசுத்தொகை இந்திய மதிப்பில் சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் என்பது கவனிக்கத்தக்கது.