கோலாலம்பூர்:
60 வயது பெண் நிறுவன இயக்குனர் ஒருவர் காதல் மோசடியில் சிக்கி, RM1.25 மில்லியனை இழந்தார்.
பாதிக்கப்பட்ட மாது குறித்த விஷயம் தொடர்பில் கடந்த ஜூன் 28ஆம் தேதி காவல்துறையில் புகார் அளித்ததாக புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் ஆணையர், டத்தோஸ்ரீ ராம்லி முகமட் யூசுப் கூறினார்.
“பாதிக்கப்பட்ட பெண்ணை ஃபேஸ்புக் மூலமாக இங்கிலாந்தில் பணிபுரியும் ஒரு சிங்கப்பூரர் என்று கூறிக்கொண்ட ஒருவர் அறிமுகமானார்.
“குறித்த ஆடவர் பெட்ரோனாஸ் திட்டத்தைப் பெறுவதற்காக மலேசியா வருவதாகவும், பாதிக்கப்பட்டவரைச் சந்திப்பதாகவும் அப்பெண்ணுக்கு வாக்குறுதியளித்தார். இருப்பினும், அத்திட்டத்தைப் பெறுவதற்கு மூலதனமாக அப்பெண்ணிடம் அவர் கடன் கேட்டார், மேலும் அதனை திருப்பிச் செலுத்துவதாக பாதிக்கப்பட்டவரிடம் உறுதியளித்தார்,” என்று அவர் கூறினார்.
இந்த சூழ்ச்சியை நம்பி, பாதிக்கப்பட்டவர் இரண்டு வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் மொத்தம் RM1.25 மில்லியன் மதிப்புள்ள 11 பணப் பரிவர்த்தனைகளைச் செய்தார்.
“முழு சூழ்நிலையையும் ஒரு நண்பரிடம் சொன்னபோது தான் ஏமாற்றப்பட்டதை பாதிக்கப்பட்ட பெண் உணர்ந்தார்.
காவல்துறையினர் மோசடிகள் பற்றி தொடர்ச்சியான நினைவூட்டல்கள், விழிப்புணர்வுகளை செய்துவருகின்றபோதிலும் காதல் மோசடி வழக்குகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன என்று கமிஷனர் ரம்லி கூறினார்.