Offline
டிரம்ப் மீது தாக்குதல்: பைடன் கண்டனம்
News
Published on 07/15/2024

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரான குடியரசுக் கட்சியின் டோனல்ட் டிரம்ப் துப்பாக்கிச்சூடு காரணமாக காயமுற்ற சம்பவத்துக்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். சனிக்கிழமையன்று (ஜூலை) பென்சில்வேனியா மாநிலத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தின்போது அச்சம்பவம் நிகழ்ந்தது. சம்பவத்தில் பார்வையாளர்களில் ஒருவராவது கொல்லப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது. குடியரசுக் கட்சியினர், ஜனநாயகக் கட்சியனர் என இரு தரப்பினரும் சம்பவம் நிகழ்ந்து சில நிமிடங்களிலேயே கண்டனம் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூடு நடந்தபோது முன்னாள் அமெரிக்க அதிபரான திரு டிரம்ப், முகத்தில் ரத்தம் வடிந்தபடி அமெரிக்க உளவுத் துறையால் மேடையிலிருந்து அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார்.

இதோ பாருங்கள், அமெரிக்காவில் இத்தகைய வன்முறைக்கு இடமில்லை என்று அதிபர் ஜோ பைடன் தேசிய அளவில் தொலைக்காட்சிவழி எடுத்துரைத்தார். அருவருப்பாக இருக்கிறது. இந்த நாட்டை இணைக்கவேண்டியதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று. நாம் இவ்வாறு நிகழவிடக்கூடாது. இதை நாம் ஏற்றுக்கொள்ளமுடியாது,” என்றும் திரு பைடன் கூறினார்.  டிரம்ப், பென்சில்வேனியா ஆளுநர் ஜோ‌ஷ் ‌ஷப்பிரோ, பட்லர் மேயர் பாப் டேன்டாய் ஆகியோரிடம் பைடன் பேசியதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் பின்னர் தெரிவித்தார்.

துணை அதிபர் கமலா ஹாரிஸ், அவர் (டிரம்ப்), அவரின் குடும்பத்தார் மற்றும் முட்டாள்தனமான இந்தத் துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்ட, காயமடைந்த அனைவருக்காகவும் நாங்கள் வேண்டுகிறோம் என்று எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டார்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் எக்ஸ் தளத்தில், நமது ஜனநாயகத்தில் அரசியல் வன்முறைக்கு இடமில்லை என்று எடுத்துரைத்தார். மற்றொரு முன்னாள் அதிபரான குடியரசுக் கட்சியின் ஜார்ஜ் டபிள்யூ பு‌ஷ், தாக்குதலை கோழைத்தனமான செயல் எனக் கூறி கண்டனம் தெரிவித்தார்.

தம் மீது மேற்கொள்ளப்பட்ட கோழைத்தனமான கொலை முயற்சிக்குப் பிறகு திரு டிரம்ப் சீராக இருப்பதை எண்ணி லோராவும் நானும் நன்றியுடன் இருக்கிறோம். துரிதமாக செயல்பட்ட உளவுத் துறையைச் சேர்ந்த ஆண்களையும் பெண்களையும் நாங்கள் பாராட்டுகிறோம் என்று  பு‌ஷ் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார். இவர்களுடன் அமெரிக்காவின் பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

Comments