Offline
விமான நிலையங்களில் கூடுதல் தானியக்க வாயில்கள் நிறுவப்படும்
News
Published on 07/23/2024

புத்ராஜெயா:

கோலாலம்பூர், பினாங்கு அனைத்துலக விமான நிலையங்களில் நெரிசலைக் குறைக்க புதிய தானியக்க வாயில்களை நிறுவ குடிநுழைவுத் துறையுடன் இணைந்து மலேசிய உள்துறை அமைச்சு செயல்படும்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய முனையங்கள் 1லும் 2லும் தலா 40 புதிய தானியக்க வாயில்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியன் இஸ்மாயில் இன்று (ஜூலை 22) செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

மேலும் பினாங்கு விமான நிலையத்தில் கூடுதல் வசதிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன.

தென்கிழக்காசிய நாடுகள் சாங்கத்திற்கு (ஆசியான்) அடுத்த ஆண்டு மலேசியா தலைமை தாங்கவிருப்பதையும் ‘விசிட் மலேசியா இயர் 2026’ இயக்கத்தையும் முன்னிட்டு இரு விமான நிலையங்களில் தானியக்க வாயில்களை அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சைஃபுடின் கூறினார்.

குறைந்த அபாயம் உடைய மேலும் 36 நாடுகளையும் வட்டாரங்களையும் சேர்ந்த பயணிகள், மலேசியாவின் விமான நிலையங்களில் ஜூன் 1 முதல் தானியக்க வாயில்களைப் பயன்படுத்தலாம் என அமைச்சர் முன்னதாகக் கூறியிருந்தார்.

இதற்கிடையே, ஜோகூர் பாருவின் இரு நிலவழி சோதனைச்சாவடிகளில் கியூஆர் குறியீட்டு முறைக்குப் பயனாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக அவர் சொன்னார்.

ஜூலை 1 முதல் 18 வரை, சுல்தான் இஸ்கந்தர் கட்டடம் வழியாகச் சென்ற மொத்தம் 197,901 பேருந்து பயணிகளும் சுல்தான் அபு பக்கர் காம்ப்ளெக்ஸ் வழியாகச் சென்ற 311,130 பேருந்து, மோட்டார்சைக்கிள் பயணிகளும் கியூஆர் குறியீட்டு முறையைப் பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments