மிச்சிகன்:
ஜனநாயகத்தைக் காக்க துப்பாக்கிக் குண்டடி பட்டதாக அதிபர் தேர்தல் வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டோனல்ட் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
அண்மையில் அவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டைக் குறிப்பிட்டு அவர் அவ்வாறு தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை (ஜூலை 20) மிச்சிகன் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் டிரம்ப் உரையாற்றினார். கொலைமுயற்சியில் இருந்து தப்பித்த பின்னர் அவர் பங்கேற்ற அந்த முதல் பிரசாரக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கும் ஜேடி வேன்ஸுடன் டிரம்ப் பங்கேற்ற முதல் பிரசாரக் கூட்டமாகவும் அது அமைந்தது.
கூட்டத்தில் உரையாற்றிய டிரம்ப், “நான் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ஜனநாயகக் கட்சியினர் கூறுகின்றனர். “ஆனால், ஜனநாயகத்தைக் காப்பதற்காகவே துப்பாக்கிக் குண்டு தாக்குதலுக்கு ஆளானேன். வெள்ளை மாளிகைக்குள் மீண்டும் நுழைய நான் ஆயத்தமாக உள்ளேன்,” என்று கூறினார்.
கடந்த வாரத் தொடக்கத்தில் தேசிய ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்த டிரம்ப், பிரசாரக் கூட்டத்தில் தமது வழக்கமான பாணிக்கு மாறினார். எதிர்த்தரப்பினரைக் கடுமையான வார்த்தைகளால் விமர்சிப்பதை அவர் தொடர்ந்தார்.
அவரது உரையில் பெரும்பாலும் குடிநுழைவு, பொருளியல், தேர்தல் முறைகேடு போன்றவை தொடர்பான கருத்துகளை மறுபடியும் வலியுறுத்தினார். பலவீனமானவர் என்று அதிபர் பைடனை டிரம்ப் அடிக்கடி விமர்சிப்பது உண்டு. இந்தப் பிரசாரத்திலும் அவர் அதனையே கூறினார்.
பைடனை அதிபர் போட்டியிலிருந்து விலகக் கோரும் முன்னாள் நாடாளுமன்ற நாயகர் பெலோசி உள்ளிட்ட மூத்த ஜனநாயகக் கட்சித் தலைவர்களை அவர் கடுமையாகச் சாடினார்.