Offline
வங்காளதேசத்தில் சிக்கி தவிக்கும் மலேசியர்களை தாயகம் அழைத்து வர சிறப்பு விமானம்
News
Published on 07/24/2024

கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள வங்காளதேசத்தில் உள்ள மலேசியர்களை அழைத்து வர பிரதமர் அன்வார் இப்ராஹிமின் உத்தரவுப்படி சிறப்பு விமானம் இன்று காலை 7.30 மணிக்கு KLIA டெர்மினல் 2ல் இருந்து புறப்பட்டது. 350 பயணிகளுக்கு இடமளிக்கும் திறன் கொண்ட ஏர் ஆசியாவின் Airbus A330  விமானம் டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் அனைத்துலக விமான நிலையத்திற்கு காலை 9.20 மணிக்கு (உள்ளூர் நேரம்) வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாக்காவில் உள்ள மலேசிய தூதரகத்தில் நேற்று முதல் மாணவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட மலேசியர்கள் தஞ்சம் அடைந்துள்ளதாக வெளியுறவு அமைச்சகத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிரிவு துணைச் செயலாளர் ஷசெலினா ஜைனுல் அபிடின் கூறினார். இந்த வெளியேற்றும் பணி ஜூலை 12 முதல் திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் 12 மணி நேரத்திற்கும் குறைவாக எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்காளதேசத்தில் உள்ள மலேசிய தூதரகத்திடம் இருந்து அழைத்து கிடைத்ததும், நாங்கள் விமானத்தை ஏற்பாடு செய்தோம்.  மாணவர்கள் டாக்காவில் உள்ள மலேசிய தூதரகம் வந்தடைவதை உறுதிசெய்ய காத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதால் சிறிது தாமதம் ஏற்பட்டது என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.

வெளியேற்றும் விமானம் டாக்காவிலிருந்து காலை 10 மணிக்கு (உள்ளூர் நேரம்) மலேசியாவுக்குப் புறப்பட்டு, மாலை 4.20 மணிக்கு KLIA டெர்மினல் 2ஐ வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஸ்மா புத்ரா, பிரதமர் துறை, தேசிய பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பெர்னாமாவில் இருந்து மொத்தம் 15 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வங்காளதேசத்தில் பதற்றம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து பாதுகாப்புக் காரணங்களுக்காக வங்கதேசத்தில் உள்ள அனைத்து மலேசியர்களையும் திரும்ப அழைத்து வர அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பிரதமர் நேற்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்நாட்டின் சமீபத்திய முன்னேற்றங்களை வெளியுறவு அமைச்சகம் கண்காணித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Comments