Offline
கேமி புயலால் கிழக்குச் சீனாவில் 300,000 பேர் இடம் பெயர்ந்தனர்
News
Published on 07/27/2024

பெய்ஜிங்: கேமி புயலால் கிழக்குச் சீனாவில் கிட்டத்தட்ட 300,000 பேர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அத்துடன்,சீனாவின் கிழக்குப் பகுதி முழுவதிலும் பொதுப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமி புயல் தைவானில் கனமழை பொழியக் காரணமாக இருந்தது என்றும் அங்கு 5 பேர் இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை (ஜூலை 25ஆம் தேதி) தைவானைத் தாக்கிய கேமி புயல் கடந்த எட்டு ஆண்டுகளில் அந்நாட்டை தாக்கிய மிகக் கடுமையான புயல் என்று கூறப்படுகிறது.

தைவான் வரும் முன்னர் பிலிப்பீன்ஸ் நாட்டைப் புரட்டி எடுத்த கேமி புயல் அங்கு பருவகால மழையுடன் சேர்ந்து பிலிப்பீன்ஸை தாக்கியதால் வெள்ளம், நிலச்சரிவு என அந்நாட்டை வாட்டியதில் 30 பேர் மாண்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்பில் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் பிலிப்பீன்ஸ் செஞ்சிலுவைச் சங்கத்தின் அத்தியாவசிய நிவாரணப் பணிகளுக்கு உதவும் பொருட்டு அதற்கு அமெரிக்க டாலர் 50,000 (S$67,000) தருவதாக உறுதி அளித்துள்ளதாக சங்கத்தின் ஜூலை 26ஆம் தேதியிட்ட அறிக்கை தெரிவித்தது.

இந்தக் கோடை காலத்தில் சீனா கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் கனமழை பொழிவது ஒருபுறமிருக்க, வடக்கில் வெப்பம் அலை அலையாக தாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.

சீனா உலகில் பசுமை எரிவாயுவை அதிக அளவில் வெளியேற்றும் நாடு. இது பருவநிலை மாற்றத்தைத் தூண்டி அதனால் தீவிர பருவநிலை மாற்றம் அடிக்கடி நேர்கிறது என்றும் அந்த மாற்றம் மிகக் கடுமையாக இருக்கிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கேமி புயல் கனமழைப் பொழிவை ஏற்படுத்தும் என்றும் அது வெள்ளப் பெருக்கு ஏற்படக் காரணமாக இருக்கும் என்றும் சீன அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

Comments