Offline
Menu
பிளாஷ்பேக் : எம்ஜிஆருக்கு வில்லனாக அதிக படங்களில் நடித்த அசோகன்
Published on 08/14/2024 03:05
Entertainment

பொதுவாக நாயகன் எம்ஜிஆர் என்றால் வில்லன் நம்பியார் என்று எல்லோரும் கருதுவார்கள். நம்பியார் மட்டும் எங்கள் ஊருக்கு வந்தால் அவரை அடிப்பேன் என்று பல பாட்டிமார்கள் அந்த காலத்தில் கூறுவது உண்டு. ஆனால் எம்ஜிஆர்க்கு வில்லனாக அதிக படங்களில் நடித்தவர் எஸ்.ஏ அசோகன்.

எம்ஜிஆர் படங்களில் நம்பியார் மெயின் வில்லனாக இருப்பார், ஆனால் அசோகன் துணை வில்லனாகவும் இருப்பார். இதனால் எம்ஜிஆருக்கு வேறு யார் வில்லனாக நடித்தாலும் அவர்களுடன் துணை வில்லனாக அசோகன் இருப்பார். அந்த வகையில் எம்ஜிஆருக்கு வில்லனாக 88 படங்களில் நடித்தவர் அசோகன்.

ஜெமினி கணேசன் போன்று திருச்சி ஜோசப் கல்லூரியில் பட்டம் படித்து விட்டு சினிமாவுக்கு வந்தவர் அசோகன். திருச்சியில் பிறந்து வளர்ந்த இவரது இயற்பெயர் ஆண்டனி. தனது சிறு வயது முதலே, மேடைநாடகங்களில் பங்கேற்பதிலும் பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப்போட்டிகளில் பங்கேற்பதிலும் ஆர்வம் காட்டி வந்தார். சென்னை வந்து சினிமா வாய்ப்பு தேடிய போது இயக்குநர் டி.ஆர்.ராமண்ணாவைச் சந்தித்தார். அவர் அசோகனை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார். டிஆர் ராமண்ணாதான் ஆண்டனி என்ற பெயரை அசோகன் என்று மாற்றினார்.

ஆரம்பத்தில் வில்லன் வேடங்களில் நடித்து வந்த அசோகன் பின்னர் குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை நடிகராகவும் மாறினார். சில படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார். தனது 52 வது வயதில் மாரடைப்பால் காலமானார். அவரது இளைய மகன் வின்சென்ட் அசோகன் தற்போது நடித்து வருகிறார்.

அலாவுதீன் பூதமாக அவர் நடித்தது இன்று வரைக்கும் குழந்தைகளால் ரசிக்கப்பட்டு வருகிறது. அவரது குரலின் தொனியும், வசனங்களை அவர் உச்சரித்த பாணியும், நளினமான உடல் மொழியும் இப்போதும் அவரது அடையாளமாக இருக்கிறது.

Comments