பாரீஸ்:
சமூகவலைதளங்களில் 100 கோடி followers களை கொண்ட முதல் நபர் என்ற பெருமையை பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றுள்ளார்.
பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டொ, 39, போர்ச்சுக்கல் அணிக்காக விளையாடி வந்தார். தற்போது, சவுதி அரேபியா லீக் தொடரில் அல் நசர் அணிக்காக விளையாடி வருகிறார்.
கால்பந்து ஜாம்பவானாக திகழ்ந்து வரும் இவர், 5 முறை பாலன் டி.ஆர். விருதை வென்றுள்ளார்.
அண்மையில், கால்பந்து அரங்கில் அதிகாரப்பூர்வமாக 900 கோல் அடித்த முதல் வீரர் என சாதனை படைத்தார்.
சமூகவலைதளங்களில் அதிகம் ரசிகர்களை கொண்டுள்ள விளையாட்டு வீரர்களின் பட்டியலில் ரொனால்டோ தான் முதலிடத்தில் உள்ளார். எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூகவலைதள பக்கத்திலும் கணக்கு வைத்துள்ள ரொனால்டோ, அண்மையில், UR. Cristiano எனும் யூடியூப் சேனல் ஒன்றை துவங்கினார். இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து வினாடிக்கு வினாடி சப்ஸ்கிரைபர்கள் அதிகரித்து வருகின்றனர். ஒரு வாரத்திற்குள்ளாகவே 5 கோடி பேர் அவரை பாலோ செய்கின்றனர்.
இந்த நிலையில், ஒட்டுமொத்த சமூக வலைதளப் பக்கங்களில்சேர்ந்து 100 கோடி பாலோயர்ஸ்களை கொண்ட முதல் நபர் என்ற பெருமையை பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றுள்ளார். யூடியூபில் 5 கோடி பேரும், இன்ஸ்டாகிராமில் சுமார் 64 கோடி பேரும், பேஸ்புக்கில் 17 கோடி பேரும், எக்ஸ் தளத்தில் சுமார் 11.3 கோடி பேரும் பின்தொடர்கின்றனர்.
இந்த தகவலை கொண்டாடும் விதமாக, போர்ச்சுக்கல் கால்பந்து அணி புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இதனை, ரசிகர்கள் உற்சாகமாக பகிர்ந்து வருகின்றனர்.