வாஷிங்டன்,அமெரிக்காவின் லூசியானா மாகாணத்திற்கு உட்பட்ட ஷ்ரெவ்போர்ட் பகுதியருகே பெற்றோருடன் வசித்து வரும் சிறுமி பெய்டன் செயின்டிக்னன் (வயது 10). இந்த சிறுமிக்கு தூக்கத்தில் நடக்கும் சோம்னாம்புலிசம் என்ற வியாதி உள்ளது என கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று இரவில் சிறுமி பெய்டன், வீட்டில் இருந்து வெளியேறி தூக்கத்திலேயே நடந்து, லூசியானா காட்டு பகுதிக்குள் சென்றிருக்கிறாள்.
சிறுமியை தேடி பெற்றோர், பக்கத்து வீட்டுக்காரர்கள் என பலரும் பல இடங்களில் சென்று பார்த்துள்ளனர். இந்த தகவல் அறிந்து போலீஸார் மற்றும் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களும் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
எனினும், டிரோன் இயக்குபவரான ஜோஷ் குளோபர் என்பவர் உதவியால் சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளார். டிரோன் பறந்து 20 நிமிடங்களுக்கு பின்னர் சிறுமி கண்டறியப்பட்டாள். அப்போது, வெள்ளை மற்றும் ஊதா நிறத்திலான பைஜாமா உடையணிந்து காணப்பட்டார். காட்டில், தரையில் சுருண்டு படுத்து கிடந்த சிறுமியை அவளுடைய தோழியின் தந்தை மற்றும் பலர் சேர்ந்து மீட்டு, வெளியே கொண்டு வந்தனர். சிறுமி 1.5 மைல் தொலைவுக்கு நடந்து வந்து காட்டுக்குள் படுத்திருக்கிறார் என தெரிய வந்துள்ளது.
வீட்டில் இருந்து சென்ற அந்த சிறுமி காட்டுக்குள் அலைந்து, திரிந்திருக்கிறாள். பின்னர் ஓரிடத்தில் படுத்து தூங்கி விட்டாள். நல்லவேளையாக, கொசுக்கள் கடித்தது தவிர வேறு எந்த பாதிப்புக்கும் சிறுமி ஆளாகவில்லை. சிறுமியை டிரோன் உதவியுடன் காட்டில் இருந்து மீட்கும் காட்சிகள் வீடியோவாக வெளிவந்து வைரலாகி வருகின்றன.