Offline
Menu
71 நாட்களுக்கு பின் ஓட்டுனர் உடல் மீட்பு
Published on 09/27/2024 02:16
News

உத்தர கன்னடா: கடந்த ஜூலையில் உத்தர கன்னடா மாவட்டம், சிரூரில் நிலச்சரிவு ஏற்பட்டதில், கங்காவலி ஆற்றில் லாரியுடன் அடித்துச் செல்லப்பட்ட கேரள ஓட்டுனர் சடலம், 71 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்டது.

உத்தர கன்னடா மாவட்டம், கார்வாரின் சிரூரில், கடந்த ஜூலையில பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 11 பேர் உயிரிழந்தனர். எட்டு பேரின் சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டன. கங்காவலி ஆற்றில் மூழ்கிய ஜெகந்நாத் நாயகா, லோகேஷ் நாயகா, கேரள லாரி ஓட்டுனர் அர்ஜுன் ஆகியோரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. மூவரின் சடலங்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வந்தது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், ஜூலை 28 முதல் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இரண்டு மாதங்களுக்கு பின், இம்மாதம் 20 முதல் ராணுவம், தேசிய – மாநில பேரிடர் மீட்பு குழுவினர், நீச்சல் வீரர்களைக் கொண்டு மீண்டும் தேடும் பணி துவக்கப்பட்டது.

இம்முறை கோவாவில் இருந்து துார்வாரும் கப்பலும் கொண்டு வரப்பட்டது. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கேரளா லாரியின் மரப்பலகை, டயர்கள் இம்மாதம் 21ல், 15 அடி ஆழத்தில் கிடைத்தன.

இதனால் நம்பிக்கை அடைந்த மீட்புக் குழுவினர், தொடர்ந்து லாரியை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஒவ்வொரு நாளும் லாரியின் ஒவ்வொரு பாகங்களாக கண்டுபிடிக்கப்பட்டன.

நேற்று காலை சேறு, பாறைகளுக்கு அடியில் சிக்கியிருந்த லாரியுடன் அர்ஜுனின் அழுகிய உடல் மீட்கப்பட்டது. இதை மாவட்ட எஸ்.பி., நாராயணாவும் உறுதி செய்துள்ளார்.

இதன் மூலம் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.

இன்னும் ஜெகந்நாத் நாயகா, லோகேஷ் நாயகா ஆகியோரின் சடலங்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. கேரள மாநில அரசின் தொடர் நெருக்கடியால், 71 நாட்களுக்குப் பின், அர்ஜுனின் சடலம் மீட்கப்பட்டது.

Comments