கோலாலம்பூர்:
கிள்ளான், சுங்கை கிராமாட் சுற்றுவட்டாரப் பகுதியில் அரசாங்க நிலத்தில் அனுமதியின்றி அத்துமீறி கட்டப்பட்ட எட்டு வீடுகள் இடித்து தள்ளப்பட்டன.
கிள்ளான் மாவட்டம், நில அலுவலகத்தின் தலைமையில் சிலாங்கூர் மாநில நிலம், கனிம அலுவலகம், தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைமையகம், தெனாகா நேஷனல் பெர்ஹாட், சிலாங்கூர் குடிநீர் வாரியம் ஆகியவை இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக கிள்ளான் மாவட்ட மன்ற அதிகாரி அம்ரி இஸ்மாயில் தெரிவித்தார்.
அரசாங்க நிலத்தில் அத்துமீறி கட்டப்பட்ட அந்த வீடுகளை இடிக்கும் நடவடிக்கை, அரசாங்க சொத்துக்களை பராமரிக்கும் வகையில் சட்ட விதிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
அங்கு வீடுகள் நிர்மாணிக்கப்படக் கூடாது என்பதை நினைவுறுத்தும் எச்சரிக்கை பலகைகள் நிறுத்தப்பட்டும் பலமுறை அது புறக்கணிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
மேலும் அந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு பொது மக்களுக்கு விற்கப்படும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் இதுபோன்ற வில்லங்கங்களில் சிக்கிவிடக் கூடாது என்றும் விரிவான ஆய்வுகளுக்குப் பின்னரே சொத்துகளை வாங்கும் முயற்சிகளில் பொது மக்கள் இறங்க வேண்டும் என்றும் அவர் நினைவுறுத்தினார்.