Offline
உலகிலேயே ஆக அதிக காலம் சிறையில் இருந்த மரண தண்டனைக் கைதி விடுவிக்கப்பட்டார்
News
Published on 09/28/2024

ஷிசுவோகா: உலகிலேயே ஆக அதிக காலம் சிறைவாசம் அனுபவித்த மரண தண்டனைக் கைதியை, மறு விசாரணைக்குப் பிறகு குற்றமற்றவர் என்று கூறி செப்டம்பர் 26ஆம் தேதி ஜப்பானிய நீதிமன்றம் விடுவித்தது.

தம்முடைய முதலாளி, முதலாளியின் மனைவி, அவர்களின் இரு பதின்ம வயதுப் பிள்ளைகள் ஆகியோரைக் கொலை செய்ததாக திரு ஐவாவ் ஹக்கமாடா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு 1968ஆம் ஆண்டு நிரூபணமானதை அடுத்து அவர் 46 ஆண்டுகளாகச் சிறையில் இருந்தார்.

“விசாரணை அதிகாரிகள் ஆடைகளை ரத்தமாக்கி ஆதாரங்களைச் சேதப்படுத்தினர்,” என்று செப்டம்பர் 26 நடந்த தீர்ப்பளிப்பின்போது கூறப்பட்டதை ஏஎஃப்பி செய்தி நிறுவனம் அறிந்து வந்தது.

வாக்குமூலத்தை வற்புறுத்திப் பெறுவதற்காக அதிகாரிகள் மனிதாபிமானமற்ற விசாரணை முறைகளைக் கையாண்டதாகவும் மனரீதியான, உடல்ரீதியான வலியை இழைத்ததாகவும் சுட்டிக்காட்டி நீதிமன்றம் சாடியது.

முன்னாள் குத்துச்சண்டை வீரரான 88 வயது திரு ஹக்கமாடா, குற்றமற்றவர் என்று தீர்ப்பளிக்கப்பட்டபோது, அவருக்காக எப்போதும் குரல் கொடுத்து வந்த அவரின் 91 வயது சகோதரி ஹிடெக்கோ ஹக்கமாடா நீதிபதி முன்னால் தலை வணங்கினார்.

“நான் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகத்திற்குச் சென்றேன். எனக்கு 100 வயது ஆகும்வரை போராட வைக்காதீர்கள் என்று சொன்னேன்,” என்று தீர்ப்புக்குப் பிறகு திருவாட்டி ஹக்கமாடா கூறினார்.

Comments