இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பதின்ம வயதினரை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக பிரபல சமயப் போதகர் அஸ்மான் சியா அலியாஸுக்கு 24 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இரண்டு பிரம்படி தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. கிள்ளான் அமர்வு நீதிமன்றம், 17 வயது பதின்ம வயதினர் மீது உடல்ரீதியான பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.
பிப்ரவரி 20, 2022 அன்று நள்ளிரவு 12.15 மணிக்கும், ஜூன் 291 மணிக்கும், கிள்ளான், கம்போங் சுங்கை உடாங்கில் உள்ள ஹோம்ஸ்டேயில் பதின்ம வயதினர் மீது உடல்ரீதியான பாலியல் வன்கொடுமை செய்ததற்காக, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச் சட்டம் 2017 இன் பிரிவு 14(a) இன் கீழ் அஸ்மான் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
நீதிபதி நோரிடா ஆதம், 43 வயதான அஸ்மானுக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஒவ்வொரு குற்றச்சாட்டின் பேரிலும் ஒரு தடவை பிரம்படி தண்டனையும் விதித்தார். சிறையில் இருந்த காலம் முழுவதும் அஸ்மானுக்கு ஆலோசனை வழங்கவும் அவர் உத்தரவிட்டார். மேலும் அவர் விடுதலையான பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு அவரை காவல்துறை கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
டிசம்பர் 26 அன்று, அஸ்மானுக்கு எதிரான முதன்மையான வழக்கை அரசுத் தரப்பு நிரூபித்ததைக் கண்டறிந்த பின்னர், அவரது வாதத்தை முன்வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அஸ்மான் மேலும் ஒன்பது குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் – சிரம்பான் அமர்வு நீதிமன்றத்தில் ஐந்து, ஷா ஆலம் நீதிமன்றத்தில் இரண்டு, கிள்ளான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒன்று, மற்றும் அம்பாங் அமர்வு நீதிமன்றத்தில் ஒன்று.