Offline
Menu
டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் தீ விபத்துகிருஷ்ணகிரி:
Published on 09/29/2024 05:24
News

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளி அருகே வன்னியபுரம் கிராமத்தையொட்டி டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு ஐபோனுக்கு உதிரிபாகங்கள் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இன்று அதிகாலை கெமிக்கல் பிளான்ட் (ஆனோ பிளான்ட்) பகுதியில் திடீரென தீ பிடித்தது. இந்த பிளான்ட் தான் உதிரிபாகங்கள் தயாரிக்கும் முதல் பணியை மேற்கொள்ளும் பகுதி ஆகும். கெமிக்கல் பிளான்ட் என்பதால் தீ மளமளவென பரவியது. நிறுவனத்திற்கு சொந்தமான தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டையில் இருந்து தீயணைப்புத் துறை வாகனங்கள் வரவழைக்கப்பட்டு மொத்தம் 5க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

பல மணி நேரமாக போராடி தீயை அணைக்கும் அணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்து காரணமாக டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தில் தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளது.

நேற்று இரவு பணிக்கு சென்ற 3000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து ராயக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Comments