Offline
GISBH: கட்டடங்களை மூடவும் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவு
News
Published on 09/29/2024

கோலாலம்பூர்:

GISBH எனப்படும் குளோபல் இக்ராம் சர்வீசஸ், பிஸ்னஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனத்திற்கு சொந்தமான சிலாங்கூர் மாநிலத்தில் இருக்கும் அனைத்து கட்டடங்களையும் வீடுகளையும் மூடும்படி மாநில அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

அதே சமயம் அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மாநிலத்தில் அந்த நிறுவனத்திற்கும் அமைப்புக்கும் சொந்தமான எத்தனை கட்டடங்கள், எத்தனை வீடுகள், எவ்வளவு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்ற விபரங்களை வரும் புதன்கிழமை தாமே அறிவிக்க இருப்பதாக அவர் சொன்னார்.

அதற்கு சொந்தமான காப்பகங்கள்,சமயப் பள்ளிகள் உடனடியாக மூடப்பட்டன. சிலாங்கூர் மாநில இஸ்லாமிய சமய இலாகா, போலீஸ் ஆகிய இரு தரப்புகளும் விரைந்து இந்நடவடிக்கையை எடுத்தன என்று அமிருடின் குறிப்பிட்டார்.

பொது மக்களிடம் இருந்து தொடர்ந்து புகார் கிடைத்தால் சமய இலாகாவும் போலீஸும் களம் இறங்கி அவற்றை மூடும் என்று அமிரூடின் தெரிவித்தார்.

இந்த இயக்கத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் கல்வி உட்பட எதிர் கால நலன்களுக்கு மாநில அரசாங்கம் முன்னுரிமை வழங்கும் என்றும் அவர் சொன்னார்.

ரூமா இடாமான், புத்ரா இடாமான், சவ்ஜானா இடாமான் வீடுகள் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துக்கொண்ட பின்னர் அமிருடின் செய்தியாளர்களிடம் பேசினார்.

 

Comments