Offline
நேபாளத்தை வாரி சுருட்டிய கனமழை! வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 170ஆக உயர்வு
News
Published on 09/30/2024

காத்மாண்டு: நேபாளத்தில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 170 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.காலநிலை மாற்றம் எதிர்பாரா தாக்கங்களை சமீப காலமாக ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனின் வெப்ப நிலை உயர்ந்தது, பாகிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் போன்றவை இதன் விளைவுகளாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், நேபாளத்தில் தற்போது கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் வெள்ளமும், நிலச்சரிவும் ஏற்பட்டிருக்கின்றன.

கிழக்கு மற்றும் மத்திய நேபாள் பகுதிகளில் வெள்ள பாதிப்பு அதிகமாக இருக்கிறது. கார்கள், வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. நேற்றுவரை 148 பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்ததாக சொல்லப்பட்ட நிலையில், இந்த எண்ணிக்கை இன்று 170ஆக உயர்ந்திருக்கிறது. இதுவரை 4000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். பள்ளிகளுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை விடப்பட்டிருக்கிறது. மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 322 வீடுகள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. 16 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன.

தேசிய நெடுஞ்சாலைகள் பல இடங்களில் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. எனவே, மீட்பு பணிகளில் தொடர்ந்து தொய்வு ஏற்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு தினங்களாக பெய்த கனமழை காரணமாக பாகமதி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதுதான் தற்போதைய பாதிப்புகளுக்கு காரணம் என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.தங்கள் வாழ்நாளில் இப்படியொரு வெள்ள பாதிப்பை பார்த்ததில்லை என்றும், உணவு மற்றும் மருந்து பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது எனவும் மக்கள் கூறியுள்ளனர்.

வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், “வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வழக்கத்தை விட அதிகமாக வடக்கு பகுதியில் ஏற்பட்ட பருவமழை அதிகரிப்பு என இரண்டும்தான் இந்த வெள்ளத்திற்கு முக்கிய காரணம். கனமழை மேலும் ஓரிரு நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்புகளை கண்காணித்து வருவதாகவும், மீட்பு பணிக்காக தங்களின் முழு பலத்தையும் பயன்படுத்தியுள்ளதாகவும் அந்நாட்டின் தேசிய பேரிடர் மீட்பு படையினர் கூறியுள்ளனர்.

Comments