அமெரிக்காவை ஹெலன் சூறாவளி புயல் கடந்த வியாழக்கிழமை நெருங்கியது. இதனை தொடர்ந்து, புளோரிடா பகுதியில் சூறாவளி பலவீனமடைந்து வெள்ளி கிழமை கரையை கடந்தது.இதனால், பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதி மற்றும் புளோரிடா மாகாணம் முழுவதும் பெரிய அளவில் அழிவை ஏற்படுத்தி சென்றது. சூறாவளியால் மணிக்கு 225 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.
பல வீடுகள், கட்டிடங்கள் சூறாவளியால் சேதமடைந்தன. மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால், ஜார்ஜியா மாகாணத்தில் பலர் உயிரிழந்தனர். அவர்களில் மற்றவர்களைபாதுகாப்பதற்காக சென்ற தீயணைப்பு வீரர்களும் அடங்குவர். புளோரிடா, வடக்கு கரோலினா, தெற்கு கரோலினாவும் பாதிக்கப்பட்டன.
விர்ஜீனியா மாகாணத்திலும் சூறாவளி பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் சூறாவளியின் சமீபத்திய பாதிப்புகளை பற்றி விரிவாக விளக்கப்பட்டது என வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
புளோரிடா, ஜார்ஜியா மற்றும் கரோலினா பகுதிகளில் மின்சாரம் இன்றி 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. ஹெலன்சூறாவளி வடக்கு நோக்கி நகர்ந்து ஒஹியோ மற்றும் இண்டியானா மாகாணத்திலும் மின்சார விநியோகம் தடைப்பட்டு இருந்தது. பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில்வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. புளோரிடா விமான நிலையங்கள் மூடப்பட்டன. பாலங்கள் பரிசோதிக்கப்பட்டன.
அமெரிக்கா மட்டுமின்றி மெக்சிகோவின் சில தெருக்களில் வெள்ளநீர் சூழ்ந்தும், மரங்கள் அடியோடு சாய்ந்தும் காணப்பட்டன. கியூபாவின் மேற்கே 2 லட்சம் வீடுகள்மின் இணைப்பு வசதியின்றி துண்டிக்கப்பட்டு இருந்தன. வர்த்தகமும் பாதிக்கப்பட்டது. சூறாவளியால், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் ஹெலன் சூறாவளி புயல் தாக்கத்திற்கு 116 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். புளோரிடா, ஜார்ஜியா, வடக்கு கரோலினா மற்றும் டென்னசீ மாகாணங்களில் பரவலாக பாதிப்பை ஏற்படுத்தி சென்றுள்ளது. இந்த பகுதிகளில் வசித்து வரும் குடியிருப்புவாசிகளில் 20 லட்சம் பேர் மின்சார வசதியின்றி தவித்துவருகின்றனர்.
இதனை தொடர்ந்து, மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை வழங்குவதற்காக 800 மத்திய அவசரகால மேலாண் கழக அதிகாரிகள் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்தசூறாவளியால் அமெரிக்காவில் மொத்தம் ரூ.7,96,002 கோடி முதல் ரூ.9,21,687 கோடி வரை பாதிப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு உள்ளது என முதல்கட்ட மதிப்பீடு தெரிவிக்கின்றது.