டோக்கியோ, ஜப்பானில் எரியூட்டப்படும் உடல்களில் இருந்து கிடைக்கும் தங்கம் உள்ளிட்ட விலையுயர்ந்த உலோகங்கள் வாயிலாக, கடந்தாண்டில் மட்டும் 377 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
ஆசிய நாடான ஜப்பானில், மயானங்கள் அரசாலேயே நடத்தப்படுகின்றன. டோக்கியோவில் மட்டுமே தனியார் மயானங்கள் உள்ளன. அங்குள்ள, 23 வார்டுகளில் இயங்கும் ஒன்பது மயானங்களில் ஏழு தனியார் நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன.
இந்த மயானங்களில் எரியூட்டப்படும் உடல்களில் இருந்து கிடைக்கும் தங்கம், பொலாடியம் உள்ளிட்ட விலையுயர்ந்த உலோகங்கள், அந்தந்த நகர நிர்வாகங்களால் சேகரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. அவை, மயானங்கள் பராமரிப்புக்கு செலவிடப்படுகின்றன. பற்களில் நிரப்பப்படுவது, எலும்புகளை இணைப்பது போன்றவற்றுக்கு இந்த உலோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கடந்த 2023ல் ஜப்பானில், 15 லட்சம் பேர் இறந்துள்ளனர். அந்த உடல்கள் எரியூட்டப்பட்டதில் இருந்து கிடைத்த உலோகங்களை விற்றதன் வாயிலாக, 377 கோடி ரூபாய் ஜப்பான் நகரங்களுக்கு கிடைத்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின், 88 முக்கிய நகரங்களில், 42 நகரங்கள் இவ்வாறு கிடைத்துள்ள உலோகங்களை விற்றுள்ளன. இது, 2010ல் இருந்து நடந்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023ல் 3.4 மடங்கு அளவுக்கு உலோகங்கள் வாயிலாக வருமானம் கிடைத்துள்ளது. உயிரிழப்புகள் அதிகரிப்பு மற்றும் உலோகங்களின் விலை உயர்வு இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
இது, புதிய சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய சட்டங்களின்படி, உயிரிழந்தவரின் ஒரு சில எலும்புகளை மட்டுமே உறவினர்கள் பெற முடியும். மேலும், யார் யாருக்கு இந்த உரிமை உள்ளது என்பதிலும் சர்ச்சை உள்ளது. அதனால், இந்த விவகாரத்தில் உரிய சட்டத் திருத்தங்கள் தேவை என, வலியுறுத்தப்பட்டுள்ளது.