தாய்லாந்தில் பள்ளி மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.
அந்தப் பேருந்தில் மாணவர்களும் ஆசிரியர்களுமாக 44 பேர் பயணம் செய்ததாகத் தகவல் வெளியானது.
செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 1) நிகழ்ந்த அந்தத் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எத்தனை பேர் என்று சரியாகத் தெரியாத நிலையில் தீயை அணைத்த பிறகு, 25 பேர் மாண்டிருக்கலாம் என கருதப்படுவதாகத் தாய்லாந்துப் போக்குவரத்து அமைச்சர் சூரியா ஜுங்ருங்ரீங்கிட் தெரிவித்தார்.
“பேருந்தில் 38 மாணவர்களும் ஆறு ஆசிரியர்களும் இருந்ததாக முதலில் வந்த தகவல் தெரிவித்தது. அவர்களில் மூன்று ஆசிரியர்களும் 16 மாணவர்களும் மீட்கப்பட்டதால் எஞ்சிய 25 பேரும் மாண்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளோம்,” என்ற அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
“யாரும் மீட்கப்படாமல் காணாமல் போயுள்ளார்களா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை,” என்றும் அமைச்சர் கூறினார்.
பேருந்து எரிந்துகொண்டு இருந்தநிலையில் கரும்புகை வெளியேறியதைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களிலும் உள்ளூர் செய்தித்தளங்களிலும் பதிவேற்றப்பட்டன.தீயணைப்பு வாகனங்கள், காவல்துறை வாகனங்களோடு மீட்பு வாகனங்களையும் தாம் கண்டதாக ‘ராய்ட்டர்ஸ்’ புகைப்படக்காரர் தெரிவித்தார்.
பேருந்தில் சென்றவர்கள், உத்தாய் தானி என்னும் வடக்கு மாநிலத்தில் உள்ள வாட் காவோ பாயா சங்காராம் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் என்றும் பாலர் பள்ளி மாணவர்கள் முதல் 13, 14 வயது வரையுள்ள மாணவர்கள் அதில் பயணம் செய்தனர் என்றும் கூறப்பட்டது.
பாத்தும் தானி மாநிலத்தில் உள்ள ஸீர் ரிங்சிட்டி கடைத்தொகுதி அருகே பிற்பகல் 12.30 மணியளவில் சம்பவம் நிகழ்ந்ததாக பேங்காக் போஸ்ட் செய்தித்தளம் கூறியது. மேலும், அந்த இடம் பேங்காக்கின் டான் முவேயாங் விமான நிலையத்திற்கு அருக்கில் உள்ளது எனவும் அது தெரிவித்தது.
விரைவுச்சாலையில் சென்றபோது பேருந்தின் சக்கரங்களில் (tyre) ஒன்று வெடித்ததாகவும் அதன் காரணமாக சாலைத்தடுப்பில் பேருந்து மோதி தீப்பிடித்ததாகவும் மீட்புப் பணியாளர்கள் கூறினர்.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தாய்லாந்துப் பிரதமர் பேடோங்டார்ன் ஷினவாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
“மாண்டோரின் குடும்பங்களுக்கு ஒரு தாயாக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று அவர் தமது ‘எக்ஸ்’ தளப் பதிவில் கூறியுள்ளார்.