ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வேட்டையன்’ படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், அபிராமி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் என பலர் நடித்திருக்கிறார்கள். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இப்படம் வெளியாகிறது.
படம் வெளியாக இன்னும் 8 நாள்களே இருப்பதால் அதற்கான விளம்பரப் பணிகள் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. அந்தவகையில் படத்தில் நடித்திருக்கும் அபிராமி துஷாரா விஜயன் ஆகிய இருவரும் தமிழ் ஊடகம் ஒன்றுக்குப் பிரத்தியேக நேர்காணல் அளித்தனர்.
“நான் முதன்முதலில் திரையரங்கில் பார்த்த ரஜினி படம் தளபதி. அந்தப் படத்தில் மிக அருமையாக அவர் நடித்திருப்பார். அதற்கு பிறகு 2001ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சிங்கப்பூர், மலேசியாவில் நடந்த கலை நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்தோம்,” என்றார் அபிராமி.
“சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு நாங்கள் பேருந்தில்தான் சென்றோம். அப்போது முன் இருக்கையில் அவர் அமர்ந்திருந்தார். கிட்டத்தட்ட ஒரு சுற்றுலா வழிகாட்டி போல அவர் எங்களை வழிநடத்தினார். அப்போது என்னைப் பார்த்து சில பாடல்களை பாட சொன்னார். நானும் பாடினேன். அதனை என்னால் மறக்கவே முடியாது,” என அவர் கூறினார்.
“வேட்டையன் படப்பிடிப்பில் நாங்கள் சந்தித்தபோதுகூட, இன்னமும் பாடிக்கொண்டுதான் இருக்கிறீர்களா என்று என்னைக் கேட்டார். சிங்கப்பூர் கலை நிகழ்ச்சியில் நடந்ததை அவர் இன்னும் ஞாபகம் வைத்துகொண்டு இருக்கிறார் என்பதை எண்ணும்போது வியப்பாக இருக்கிறது,” என ரஜினியை எண்ணி நெகிழ்ந்தார் அபிராமி.
“எனக்கு ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. எனவே வேட்டையன் கதையை ஞானவேல் என்னிடம் சொன்னதும் உடனே சரி எனச் சொல்லிவிட்டேன்.
“வேட்டையன் படப்பிடிப்புத் தளத்திற்கு எனது கணவர், குழந்தை, அம்மா வந்திருந்தனர். எனது கணவரிடம் ரஜினி எளிமையாக நடந்துகொண்டார். மிகவும் பணிவாக பேசினார். குழந்தையை கொஞ்சினார். என்னைப் பொறுத்தவரை ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான். அது ரஜினிகாந்த் மட்டும்தான். வேறு யாரும் இருக்க முடியாது,” என்றார் அபிராமி.
அபிராமியைத் தொடர்ந்து பேசிய துஷாரா விஜயன், “படையப்பாதான் நான் திரையரங்கில் பார்த்த முதல் ரஜினி படம். ராயன் படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோதுதான் எனக்கு ஞானவேல் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது,” என்றார்.
“பின்னர், நேரில் சென்று கதை கேட்டேன். அதுவரை சூப்பர் ஸ்டார் படத்தில் நடிக்கப்போகிறோம் என்பது எனக்கு தெரியாது. இந்தப் படத்தில் எனது கதாபாத்திரம் பிடித்ததாலும், ரஜினிக்காக மட்டுமே இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்,” என துஷாரா விஜயன் கூறினார்.
“ரஜினியை முதன்முதலில் படப்பிடிப்பில் பார்த்தபோது, சார்பட்டா பரம்பரையில் நன்றாக நடித்திருந்ததாக என்னைப் பாராட்டினார். நட்சத்திரம் நகர்கிறது படத்தைப் பற்றியும் பேசினார். ராயன் படத்தைப் பார்த்துவிட்டு என்னை, ‘நீங்கள் அடுத்த விஜயசாந்தி’ என்று புகழ்ந்தார்,” என்றார் துஷாரா.