கோலாலம்பூர்:
ஒரு காரின் அடியில் சிக்கிக்கொண்டு இழுத்துச் செல்லப்பட்ட ஒரு 17 வயது இடைநிலை பள்ளி மாணவன் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே உயிரிழந்தான்.
மலாக்கா, துன் முத்தாஹிர் இடைநிலை பள்ளியை சேர்ந்த அம்மாணவன் இன்று காலை 8.05 மணியளவில் தாமான் மெர்டேக்காவில் ருந்து யமாஹா Y110 மோட்டார் சைக்கிளில் பள்ளியை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது என்று மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிறிஸ்டோபர் பத்திட் கூறினார்.
பத்து பெரண்டாம், ஜாலான் டத்தோ முகமட் ஸின் என்ற இடத்தில் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஒரு மாணவன் உயிர் துறந்தான்.
தனக்கு முன் சென்று கொண்டிருந்த நிசான் X-trail காரை இரட்டைக் கோட்டில் வலது பக்கத்தில் இருந்து முந்திச் சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்தது என்று கிறிஸ்டோபர் தெரிவித்தார்.
அக்கார் வாகனப் பட்டறையை நோக்கி திரும்பிய போது அதற்கு பின்னால் இருந்து வந்த மாணவன் முந்திச் சென்று கட்டுப்பாட்டை இழந்ததால் காரின் மீது மோதினான்.
இதனால் மாணவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சாலையின் வலது பக்கத்தில் சரிந்து சென்றது. அப்போது எதிர் திசையில் இருந்து வந்த ஹொண்டா CRZ சாலையில் சரிந்து விழுந்த அம்மாணவன் மீது மோதி மோட்டார் சைக்கிளோடு இழுத்துச் சென்றது.
மாணவன் முந்திச் சென்று கட்டுப்பாட்டை இழந்ததால் தான் இவ்விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கிறிஸ்டோபர் குறிப்பிட்டார்.
மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் இரு கார் ஓட்டுநர்களுக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.