Offline
கறுப்பின ஆடவர் மரணம்: காவலர் மூவர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு
News
Published on 10/05/2024

வாஷிங்டன்: கறுப்பின வாகனவோட்டி ஒருவரை அடித்துக் கொன்ற வழக்கில் காவல்துறை அதிகாரிகள் மூவர் குற்றவாளிகள் என அமெரிக்கக் கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

டயர் நிக்கல்ஸ் என்ற 29 வயது ஆடவரை அடித்துக் கொன்ற வழக்கில், தங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆயினும், மற்ற குற்றங்களுக்காக அம்மூவருக்கும் 20 ஆண்டுவரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

டென்னசி மாநிலம், மெம்ஃபிஸ் நகரில் கடந்த 2023 ஜனவரியில் ஐந்து கறுப்பினக் காவல்துறை அதிகாரிகள் சேர்ந்து, நிக்கல்சை அவரது வீட்டிற்கு அருகேயுள்ள பேருந்து நிறுத்தப் பகுதியில் அடித்து, உதைத்து, மின்னலைத் துப்பாக்கியால் (Taser gun) சுட்டு, மிளகுக் கரைசலைத் தெளித்தது காவல்துறைச் சீருடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புப் படக்கருவியில் பதிவானது.

அந்த ஐவரும் அப்போது ‘ஸ்கார்ப்பியன் படைப்பிரிவு’ என்ற சிறப்புக் குற்றத் தடுப்புப் படையில் இடம்பெற்றிருந்தனர். அதற்கு மூன்று நாள்களுக்குப் பிறகு மருத்துவமனையில் நிக்கல்சின் உயிர் பிரிந்தது.

அச்சம்பவத்தைத் தொடர்ந்து ‘ஸ்கார்ப்பியன்’ படைப்பிரிவு கலைக்கப்பட்டது.

அந்த ஐவருள் இருவர் மனித உரிமைகளை மீறிய இரு கடுமையான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர். டடாரியஸ் பீன், டிமெட்ரியஸ் ஹேலி, ஜஸ்டின் ஸ்மித் எனும் மற்ற மூவரும் விசாரணை கோரினர்.

நிக்கல்ஸ் தாக்கப்பட்ட காணொளியை மூன்று வாரங்களுக்குத் திரும்பத் திரும்பப் பார்த்த நீதிபதிகள் குழு, அம்மூவரும் குற்றவாளிகள் என வியாழக்கிழமையன்று (அக்டோபர் 3) தீர்ப்பு வழங்கியது.

அவர்களுக்கான தண்டனை விவரம் 2025 ஜனவரியில் தெரியவரும்.

நிக்கல்ஸ் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தது அமெரிக்காவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. காவல்துறைச் சீர்திருத்தம் தொடர்பிலும் கோரிக்கைகள் வலுத்தன.

நிக்கல்சின் இறுதிச் சடங்கில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கலந்துகொண்டார். அதே ஆண்டு வாஷிங்டனில் நடந்த அதிபர் ஜோ பைடனின் வருடாந்தர அதிபர் உரை நிகழ்வில் பங்கேற்கும்படி நிக்கல்சின் உறவினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

 

Comments