அமேதி: உத்தரப் பிரதேச மாநிலத்தின் அமேதி மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர், அவரது மனைவி, மகள் மற்றும் ஒரு வயது பெண் குழந்தை என நால்வர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
வியாழக்கிழமை (அக்டோபர் 3) அந்தக் கொடூரச் சம்பவம் நிகழ்ந்தது.
கொல்லப்பட்டவர்களின் அடையாளத்தை அமேதி மாவட்டக் காவல்துறை வெளியிட்டது.
ஆசிரியர் சுனில், 35, அவரது மனைவி பூனம், 32, மகள் திரிஷ்டி, 6, ஒரு வயது பெண் குழந்தை ஆகியோர் அவர்கள்.
ரேபரேலி வட்டாரத்தைச் சேர்ந்த சுனில் அமேதியில் உள்ள பான்ஹானா வட்டார அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியமர்த்தப்பட்டு இருந்ததாக அமேதி காவல்துறை கண்காணிப்பாளர் அனூப்குமார் சிங் தெரிவித்தார்.
அந்த நால்வரும் தங்களது வீட்டில் இருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக அவர் கூறினார்.
பெண்களைக் கேலி செய்தது தொடர்பாக சந்தன் வர்மா என்பவர் மீது அண்மையில் அந்தக் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் செய்திருந்ததாக திரு சிங் தெரிவித்தார்.
பழங்குடியின மக்கள் துன்புறுத்தல் தடைச் சட்டத்தின்கீழ் அந்தப் புகார் அளிக்கப்பட்டு இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், தற்போது நிகழ்ந்துள்ள கொலைகளுக்கும் அந்தப் புகாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதை விசாரித்து வருவதாகக் கூறினார்.
சம்பவம் நிகழ்ந்த வீட்டில் கொள்ளையோ வேறு எந்தவிதமான குற்றங்களோ நடந்ததற்கான அறிகுறி இல்லை என்றார் அவர்.
இதற்கிடையே, இந்த படுபாதகச் சம்பவத்தில் தொடர்புடையவர்களைக் கடுமையாகத் தண்டிக்க மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார்.
இது தொடர்பாக அவர் தமது சமூகப் பதிவில், “அமேதி மாவட்டத்தில் நடந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் மன்னிக்க முடியாதது.
“குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். இந்த துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருடன் உத்தரப் பிரதேச அரசு நிற்கிறது. குற்றவாளிகள் தப்ப முடியாது. அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று தெரிவித்துள்ளார்.