Offline
Menu
பூட்டிய வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரின் தாயின் சடலம் கண்டெடுப்பு
Published on 10/06/2024 21:27
News

புனே:

புனேயில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரின் தாய், பூட்டிய வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு; இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சலீல் அங்கோலா. 1989ம் ஆண்டு முதல் 1997ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட் மற்றும் 20 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர். திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராகவும் இருக்கிறார்.

சலீல் அங்கோலாவின் தாய் மாலா அசோக் அங்கோலா, 77, மஹாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் டெக்கான் ஜிம்கானா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவரின் வீட்டுக்கு பணிப்பெண் வழக்கம் போல் வந்துள்ளார். நீண்ட நேரம் கதவை தட்டியும் மாலா திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர், உறவினர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசார். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மாலா அசோக் அங்கோலா, கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். அவரின் கைகளிலும் காயம் இருந்துள்ளது. சடலத்தை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அண்மைக்காலமாக அவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அதன் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்து இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். முழுமையான விசாரணைக்கு பின்னரே அனைத்து விவரங்களும் தெரிய வரும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.

 

 

 

Comments