ஜோகூர் பாரு:
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் மின்-சிகரெட் (Vape) தயாரிப்புகளை தடை செய்த மாநிலம் என்ற வகையில், வேப் விற்பனையாளர்களுக்கு எதிராக செயல்பட அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த பொது சுகாதாரத்திற்கான புகைபிடிக்கும் பொருட்களின் கட்டுப்பாடு சட்டம் ஜோகூர் சுகாதாரத் துறைக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கும் என்று, மாநில சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குழுவின் தலைவர் லிங் தியான் சூன் கூறினார்.
இந்த சட்டம் பொதுமக்களுக்கு, குறிப்பாக சிறார்களுக்கு புகைபிடிக்கும் பொருட்கள் மற்றும் மின்-சிகரெட் விற்பனையை தடுக்க உதவும் என்றும் அவர் கூறினார்.
“கடந்த எட்டு ஆண்டுகளாக, உள்ளுராட்சி மன்றங்கள் புகைபிடிக்கும் திரவம் மற்றும் சாதனங்கள் உட்பட vape தொடர்பான பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு வணிக உரிமங்களை அனுமதிக்கவோ அல்லது வழங்கவோ இல்லை. அதுபோல ஜோகூரில் எந்த Vape பொருட்களின் விற்பனையும் அனுமதிக்கப்படாது என்றார்.
“இருப்பினும், சில வர்த்தகர்கள் மற்ற பொருட்களை விற்பதாக சாக்குப்போக்கின் கீழ் புகைத்தல் வணிக உரிமத்திற்கு விண்ணப்பித்ததை நாங்கள் கண்டறிந்தோம், மேலும் அவர்கள் அதற்கு பதிலாக Vape பொருட்களை விற்பதை நாங்கள் கண்டறிந்தோம்,” என்று அவர் கூறினார்.
இதனடிப்படையில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலான இந்த சடடத்தின் கீழ், பொது இடங்களில் புகைத்தல், விற்பனை செய்தல், பேக்கேஜிங் செய்தல், லேபிளிங் செய்தல் மற்றும் புகைபிடிப்பதைத் தடை செய்தல் தொடர்பான விதிமுறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை புகைபிடிக்கும் பொருட்களை பதிவு செய்தல் மற்றும் காட்சிப்படுத்துவது தொடர்பாக “விழிப்புணர்வு ” ஏற்படுத்தப்படும் என்று MOH தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.