SMC எனப்படும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் இந்திய சமுதாய பிள்ளைகளை சிறந்த கல்வியாளர்களாக உருவாக்கும் வேட்கையை கொண்டிருக்கிறது.
இந்திய இளம் பிள்ளைகளின் மிகச் சிறந்த எதிர்காலத்திற்கு கல்வி ஒன்றே வலுவான அடித்தளம் என்ற நிலைப்பாட்டில் எஸ்எம்சி உறுதியாக இருப்பதில் தாம் மன நிறைவுகொள்வதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஸாஹிட் ஹமிடி கூறினார்.
மலாயா பல்கலைக்கழகத்தில் இன்று காலை தொடங்கிய எஸ்எம்சி தேசிய பரீட்சை, இந்திய சமுதாய பிள்ளைகள் கல்வியில் மிகப்பெரிய சாதனைகளை படைப்பதற்கான வலுவான களமாக அமையும் என்று மனதார நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
கல்வி தான் ஒரு வளப்பமிகு நாட்டிற்கான அடித்தளம் என்பதில் அதீத நம்பிக்கை கொண்டிருக்கும் எஸ்எம்சி தேசிய, உலகலாவிய வெற்றியாளர்களை தயார்ப்படுத்துவதற்கு எஸ்எம்சி தேசிய பரீட்சை வழி மாணவர்களின் நனிச்சிறந்த ஆற்றலுக்கு பாதை அமைத்திருக்கிறது என்று தம்முடைய வாழ்த்துச் செய்தியில் டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமிடி பாராட்டினார்.
டான்ஸ்ரீ தம்பிராஜா:
இது ஒரு பரீட்சை மட்டும் அல்ல. மாறாக மாணவர்களின் மீள்தன்மையையும் கல்வி மீதான பேரார்வத்தையும் நிரூபிக்கும் ஒரு களம் என்று எஸ்எம்சி தோற்றுநர்-இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் எம்.தம்பிராஜா தெரிவித்தார்.
கல்வி என்பது அதிசக்தி வாய்ந்த ஓர் ஆயுதம். இது மாணவர்களை மட்டும் அன்றி அவர்களை சுற்றியுள்ள உலகத்தையே உருமாற்றம் செய்யும் வாய்மை கொண்டது என்பதை மறந்து விடக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
ஒவ்வோர் இந்திய மாணவரும் அவரவர் குடும்பத்திற்கும் ஒரு போர் வீரர் போன்றவர் என்பதையும் டான்ஸ்ரீ தம்பிராஜா அழுத்தமாக சுட்டிக் காட்டினார்.