டெய்ர் அல்பலாஹ் :
வடக்கு காசாவில் இஸ்ரேல் ராணுவம் தன் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. மசூதி மற்றும் பள்ளியில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் தெற்கு பகுதியிலும் இஸ்ரேல் ராணுவம் நேற்றும் தாக்குதலை தொடர்ந்தது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்தாண்டு, அக்., 7ல் தாக்குதல் நடத்தினர். இதில், 1,200 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, ஹமாஸ் பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது. அது ஓராண்டை எட்டியுள்ளது. இதற்கிடையே, ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக, அண்டை நாடான லெபனானில் இருந்து இயங்கும் ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வந்தனர். சமீபத்தில் அந்த அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதலில் ஈடுபட்டது. அந்த அமைப்பின் தலைவர் உட்பட பல முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த இரண்டு பயங்கரவாத அமைப்புகளுக்கும் ஆதரவு அளித்து வரும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. ஒரே நேரத்தில், 180க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை செலுத்தியது. இதையடுத்து, மும்முனை தாக்குதல்களை இஸ்ரேல் சந்தித்து வருகிறது. ஈரானுக்கு தகுந்த பதிலடி தரப்படும் என, இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது.
காசாவின் வடக்கு பகுதியில் உள்ள மக்களை தென் பகுதிகளுக்கு செல்லுமாறு இஸ்ரேல் ஏற்கனவே எச்சரித்திருந்தது. இருப்பினும் 30,000க்கும் மேற்பட்டோர் அங்கு தொடர்ந்து இருப்பதாக கூறப்படுகிறது. கட்டடங்கள் உள்ளிட்டவை கடுமையாக சேதமடைந்த நிலையில், மசூதி, பள்ளிகளில் மக்கள் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், இஸ்ரேல் ராணுவம் வடக்கு காசாவின் டெய்ர் அல்பலாஹ் நகரின் முக்கிய மருத்துவமனைக்கு அருகே உள்ள மசூதியை குறிவைத்து நேற்று வான்வழி தாக்குதலை நடத்தியது. இதைத் தவிர, ஒரு பள்ளி மீதும் தாக்குதல் நடத்ப்பட்டது. இந்த தாக்குதல்களில் 26 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகளை குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடந்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது.