Offline
பயங்கரவாதிகள் தாக்குதல் பாக்.,கில் 2 சீனர்கள் பலி
News
Published on 10/09/2024

கராச்சி:

பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே நடந்த பயங்கரவாத தாக்குதலில் சீனாவைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்தனர். எட்டு பேர் காயமடைந்தனர்

பாகிஸ்தான் கராச்சியில் உள்ள காசிம் துறைமுக மின் நிறுவனத்தில் இருந்து நேற்று டேங்கர் லாரி உள்ளிட்ட வாகனங்கள், அங்குள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையம் அருகே சென்றன.

அப்போது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் டேங்கர் லாரி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதுடன் தீப்பற்றி எரிந்தது.

தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் டேங்கர் லாரியில் எரிந்த தீயை அணைத்து, உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு பேர் உயிரிழந்தது தெரியவந்தது. இதுதவிர, படுகாயங்களுடன் எட்டு பேரை மீட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் டேங்கர் லாரியில் பயணித்தவர்கள் சீன நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இவர்கள், மின் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர்கள் என தெரியவந்தது. தாக்குதல் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தானில் உள்ள சீன துாதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி, அதற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையே, இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது.

 

Comments