பெண்டாங்கில் உள்ள கம்போங் ரம்பையில் இன்று (அக் 8) ஆண் குழந்தையைக் கைவிட்டுச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். காலை 8.08 மணியளவில் கைவிடப்பட்ட குழந்தையைப் பற்றி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது என்று பெண்டாங் காவல்துறைத் தலைவர் துணைக் கண்காணிப்பாளர் ரோஸ்லான் மாட் கூறினார். தொப்புள் கொடி இணைக்கப்பட்ட நிலையில், ஒரு பெட்டியில் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார். குழந்தை பிறந்த 12 மணி நேரத்தில் கைவிடப்பட்டதாக போலீசார் கருதுகின்றனர்.
குழந்தை பிறந்ததை மறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பொறுப்பற்ற நபரால் பெட்டிக்குள் துணியால் சுற்றப்பட்டு விட்டுச் செல்லப்பட்டது. இன்று (அக். 8) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்டாங் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட குழந்தை சிகிச்சைப்பிறகு உடல் நலத்துடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கு சமூக நலத்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக ரோஸ்லான் கூறினார்.
பிரசவத்தை மறைப்பதற்காக குற்றவியல் சட்டத்தின் 317ஆவது பிரிவின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தினார். ஊடக அறிக்கைகளின்படி, வயதான தம்பதிகள் மஹ்மூத் லெபாய் சாலே 77, மற்றும் சே சோம் சாத் 75, ஆகியோர் தங்கள் கடையின் முன் விடப்பட்ட பெட்டியில் ஆண் குழந்தையைக் கண்டனர். குழந்தையின் அழுகையை அவர்கள் முதலில் பூனைக்குட்டியின் அழுகை என நினைத்ததாகத் தெரிவித்தனர்.