டில்லியில் நேற்று நடந்த விழாவில், திரை பிரபலங்கள் மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், நித்யா மேனன் உள்ளிட்டோருக்கு தேசிய திரைப்பட விருதுகளை, ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.
கடந்த 2022ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் ஆகஸ்டில் அறிவிக்கப்பட்டன. இதில், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் – 1 படத்துக்கு நான்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதே போல், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், 70வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, டில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நேற்று நடந்தது. இதில், சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதை, பொன்னியின் செல்வன் – 1 இயக்குனர் மணிரத்னம், தயாரிப்பாளர் சுபாஸ்கரன் ஆகியோருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.
இந்த படத்துக்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது, இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது. இது, அவரது ஏழாவது தேசிய விருது. பொன்னியின் செல்வன் – 1 படத்துக்காக, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது ரவி வர்மனுக்கும், சிறந்த ஒலிப்பதிவுக்கான தேசிய விருது, ஆனந்த் கிருஷ்ணமூர்த்திக்கும் வழங்கப்பட்டது.