தனது இளமைப் பருவத்தின்போது எதிர்கொண்ட சவால்களையும் அனுபவங்களையும் இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
சொந்த ஊரில் இருந்து யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் தாம் சென்னைக்கு வந்ததாகவும் பசியால் அவதிப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“வீட்டில் யாரிடமும் சொல்லாமல் நான் சென்னைக்கு வந்தபோது எனக்கு 15 வயது. அரைக்கால் சட்டையுடன் சென்னைக்கு செல்லும் பேருந்தில் ஏறிவிட்டேன். எங்கே இறங்க வேண்டும் என்பதுகூட தெரியாது. கடைசியில் சென்னையின் அடையாளமாக இருக்கும் எல்ஐசி கட்டடத்தின் முன்னே இறங்கினேன். கையில் ஒரு டைரி மட்டுமே இருந்தது. இதில் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த சில இயக்குநர்கள், நடிகர்களின் முகவரிகளை மட்டுமே குறித்து வைத்திருந்தேன்.
“மயக்கம் வரும் அளவுக்கு நல்ல பசி. என்ன செய்வது என்று தெரியாமல், தியாகராஜ நகருக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்று கேட்டபோது யாரோ வழி கூறினார். தட்டுத்தடுமாறி நடந்து சென்றபோது வயதான பாட்டி ஒருவர் இட்லி விற்றுக்கொண்டிருந்தார்.
“என் நிலைமையைப் புரிந்துகொண்டு காசு வாங்காமல் இட்லி கொடுத்தார். சாப்பிட்ட பின்னர் அப்படியே நடந்து வந்து அண்ணா மேம்பாலத்தின் கீழே படுத்துவிட்டேன். பிறகு காவல்துறையினர் வந்து அங்கு படுத்துக்கிடந்த அனைவரையும் எழுப்பிவிட்டனர்.
“நான் தூங்குவதுபோல் நடித்தேன். ஆனால் அவர்கள் விடவில்லை. தலைமைக் காவலர் ஒருவர் விசாரித்தபோது சினிமாவில் நடிக்க வந்திருப்பதாக தெரிவித்தேன்.
“இங்கே படுத்திருந்தால் எப்படியப்பா நடிப்பாய். சரி என்னுடன் வா என்று தனது சைக்கிளில் உட்காரவைத்து அழைத்துச் சென்றார், அண்ணா சாலையில் உள்ள காவல்நிலையத்தில் படுக்கவைத்து மறுநாள் என்னை அனுப்பினார்.
“இதுபோன்ற நல்ல மனிதர்கள் இருப்பதால்தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருப்பதாக நம்புகிறேன். யாரையும் பார்த்து பயப்படாதீர்கள். மகிழ்ச்சியாய் இருக்கப் பாருங்கள். அனைத்தையும்விட மனதுக்குப் பிடித்த வேலையைச் செய்யுங்கள்,” என்று தனது அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார் சமுத்திரக்கனி.
அப்பேட்டியைக் கண்ட ரசிகர்கள் பலர், “நீங்கள் அனைவர்க்கும் சிறந்த முன் உதாரணமாக விளங்குகிறீர்கள்,” என்று சமூக ஊடகங்களில் பாராட்டியுள்ளனர்.