வாஷிங்டன்:
உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட ரஷ்யாவிற்கு முக்கிய தொழில்நுட்பங்களை வழங்கிய 400 நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதில் 19 இந்திய நிறுவனங்களும் அடக்கம்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் இரண்டு ஆண்டுகளை கடந்த போதிலும் அது நிற்பதற்கான அறிகுறி ஏதும் தென்படவில்லை. அமெரிக்கா, ஐ.நா., ஐரோப்பிய நாடுகள் எவ்வளவு தடை விதித்தாலும் அதனை ரஷ்யா கண்டுகொள்ளவில்லை.
இருப்பினும், அந்நாட்டிற்கு உதவும் நிறுவனங்கள், தனிநபர்கள் மீது அமெரிக்கா தொடர்ந்து தடை விதித்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவிற்கு தேவைப்படும் முக்கியமான கருவிகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை வழங்கியதற்காக 400 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. அதில், 19 இந்திய நிறுவனங்களும் அடக்கம். சீனா, சுவிட்சர்லாந்து, யுஏஇ, கஜகஸ்தான், தாய்லாந்து மற்றும் துருக்கியை சேர்ந்த நிறுவனங்களும் தடையை எதிர்கொண்டுள்ளன.
இது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், சட்டத்திற்கு புறம்பான வகையில் போரில் ஈடுபட்டு வரும் ரஷ்யாவிற்கு தேவையான முக்கியமான தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் ரஷ்யாவிற்கு கிடைப்பதை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் எனக்கூறினர்.
தடைக்கு உள்ளான இந்திய நிறுவனங்கள், ராணுவம் மற்றும் பயணிகள் போக்குவரத்திற்கு தேவையான உபகரணங்களை தயாரிப்பவை என தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: அமெரிக்காவின் தடை குறித்து அறிந்துள்ளோம். தடை விதிக்கப்பட்ட நிறுவனங்கள் இந்திய சட்டத்தை மீறவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
.